கொல்கத்தா பெண் டாக்டர் கொடூரக் கொலை.. சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை.. நீதிபதி கூறிய காரணம்!

Meenakshi
Jan 20, 2025,07:08 PM IST

கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர்  கொடூர கொலையில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இச்சம்பவத்திற்கு வன்மையாக கண்டனம் தெரிவித்து பயிற்சி பெண் மருத்துவரின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு நாடு தழுவிய போராட்டமும் நடைபெற்றது. 


இந்த சம்பவத்தை அடுத்து இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் தங்களின் மருத்துவ சேவைகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே போலீசார் மருத்துவர்களிடம் போராட்டத்தை கைவிட சமரசம் பேசியும், முடியவில்லை. பின்னர் இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.




மறுபுறம் சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவுப்படி, பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு சுப்ரீம் கோர்ட் தாமாகவே முன்வந்து  வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய்க்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சிபிஐ நிரூபித்துள்ளது. பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த சஞசய் ராய், அதன் பின்னர் பெண் மருத்துவரின் குரல்வளையை நெரித்து, அவரின் முகத்தை இறுக்கி மூடியதால் தான் அவர் உயிரிழக்க நேர்ந்துள்ளது. அதனால், சஞ்சய் ராய் குற்றவாளி என்று கடந்த வாரம் சியால்டா சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 


அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரம் இன்று வெளியாகினது. இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என பரவலாக தகவல்கள் பரவிய நிலையில், குற்றவாளி சஞ்சய்ராயை சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்தும், குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது நீதிமன்றம். மேலும், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் குடும்பத்தாருக்கு மே.வங்க அரசு ரூ.17 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது அரிதிலும் அரிதான வழக்கு அல்ல என மரண தண்டனை விதிக்கப்படாததற்கு என்று நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.


ஆனால் இந்தத் தீர்ப்பு பெண் மருத்துவர் குடும்பத்தை கடுமையாக அதிருப்தி அடையச் செய்துள்ளது. கோர்ட் அறிவித்துள்ள இழப்பீட்டை ஏற்க மாட்டோம் என்று பெண்ணின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியும் இந்தத் தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். சிபிஐ தீவிரமாக வாதாடி, கடுமையான தண்டனை பெற்றுத் தரத் தவறி விட்டது. இந்த வழக்கை காவல்துறையே விசாரித்திருந்தால் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் திறமையாக வாதாடியிருப்போம் என்று கூறியுள்ளார் மமதா பானர்ஜி.


இன்று இரண்டு முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு வெளியானது. முதலில்,  கேரள மாநிலம் பாறசாலை பகுதியில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் காதலி க்ரிஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நெய்யாட்டிங்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. க்ரீஷ்மா செய்தது மிகப் பெரிய குற்றம். காதலனோடு சேர்த்து காதலையும் அவர் கொலை  செய்துள்ளார். தனது காதலிதான் விஷம் கொடுத்துள்ளார் என்று தெரிந்தும் கூட காதலன் தனது காதலியைக் காட்டிக் கொடுக்காமல் கடைசி வரை காதலுடன் இருந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் இப்பெண் மீது இரக்கம் காட்ட முடியாது. அவரது வயதையும் பார்க்கக் கூடாது என்று கூறி உச்சபட்ச தண்டனையைக் கொடுத்துள்ளது. 


ஆனால் அனைவரும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட மேற்கு வங்க வழக்கில் ஆயுள் தண்டனையோடு குற்றவாளி சஞ்சய் ராய் தப்பியுள்ளது பலரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இரண்டுமே கொடூரமான கொலைகள்தான்.. ஆனால் பல நாட்களாக நடந்து வந்த இரண்டு வழக்குகளுக்கு  இன்று இரண்டு விதமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்