Happy New year.. பிறந்தது 2025 புத்தாண்டு .. முதலில் கொண்டாடிய நாடு எது தெரியுமா?
தராவா : 2025 புத்தாண்டை வரவேற்று, கொண்டாட உலகமே காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சில நாடுகளில் 2025 ம் ஆண்டு புத்தாண்டு பிறந்து விட்டது.. மக்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.
டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தான் புத்தாண்டு பிறக்கும். பல்வேறு வகைகளில் இதை வரவேற்று, கொண்டாட அனைவரும் தயாராகி வருகின்றனர். ஆனால் பூமியின் சுழற்சியின் காரணமாக உலகம் மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் புத்தாண்டை கொண்டாடுவது கிடையாது. புத்தாண்டை மக்கள் கொண்டாடும் நேரம் ஒவ்வொரு பகுதியிலும் மாறுபடும். இன்னும் சொல்லப் போனால் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சிறிய தீவுகள், நாடுகள் தான் புத்தாண்டு பிறப்பை முதலில் கொண்டாடுவார்கள்.
அதன் அடிப்படையில் 2025ம் ஆண்டு புத்தாண்டும் மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு எனப்படும் கிரிபாடி என்ற தீவில் தான் முதலில் பிறந்துள்ளது. மிகவும் சிறிய அளவிலான இந்த தீவில் தான் சர்வதேச நேரப்படி காலை 5 மணிக்கு 2025ம் ஆண்டு முதலில் பிறந்துள்ளது. இவர்களை தொடர்ந்து நியூசிலாந்தில் காலை 5.15 மணிக்கு புத்தாண்டு பிறந்ததாக கொண்டாடப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் முக்கிய நகரங்களால் ஆக்லாந்து, வெல்லிங்டன் ஆகிய பகுதிகளில் காலை 6 மணிக்கு புத்தாண்டு பிறந்துள்ளது.
பசிபிக் பிராந்தியத்தில் டோங்கா, சொமாவோ, ஃபிஜி ஆகிய பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது. நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரோலியாவின் சிட்னி, மெல்போர்ன், கேன்பரா ஆகிய பகுதிகளிலும் பட்டாசுகள் வெடித்து புத்தாண்டு பிறந்ததை மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் ஆஸ்திரேலியாவின் அடிலைடு, புரோகன் ஹில், க்யூன்ஸ்லாந்து ஆகிய பகுதிகளில் இனி தான் புத்தாண்டு பிறக்க உள்ளது.
அது மட்டுமல்ல பூமியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஜப்பான், தென் கொரியா, வட கொரியா ஆகியவற்றில் காலை 10 மணிக்கும், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் போன்ற நகரங்களுக்கு காலை 10.15 மணிக்கு தான் புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்தோனேசியா, தாய்லாந்து, மியான்மர், வங்களாதேஷ், நேபால், இந்தியா, இலங்கை போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சர்வதேச நேரப்படி பகல் 01.30 மணிக்கு தான் புத்தாண்டு பிறக்கும். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நகரங்களில் புத்தாண்டு பிறக்கும். 2025ம் ஆண்டு புத்தாண்டை கடைசியாக கொண்டாடும் நாடு தென்மேற்கில் உள்ள ஹவாய் தீவு தான். இங்கு மாலை 05.30 மணிக்கு தான் புத்தாண்டு பிறக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்