இங்கிலாந்து மன்னர் சார்லஸ்சுக்கு புற்று நோய் .. விரைவில் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை!

Meenakshi
Feb 06, 2024,06:35 PM IST

லண்டன்: இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்சுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அதிகார பூர்வமான தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது.


கடந்த ஆண்டு தான் சார்லஸ் இங்கிலாந்து மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். இங்கிலாந்து மன்னருக்கு வயது 75. தனது தாயார் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு பின்னர் இவர் மன்னராக பொறுப்பேற்றார். மன்னருக்கு வில்லியம், ஹாரி என இரு  மகன்கள் உள்ளனர்.


மன்னர் சார்லஸ்சுக்கு  கடந்த வாரம் திடீர் என உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஏற்கனவே அவருக்கு புரோஸ்டேட் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் வேறு ஒரு புற்றுநோய் பாதிப்பு அவருக்கு ஏற்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.




இது குறித்து அரண்மனை வெளியிட்ட செய்தி குறிப்பில், கடந்த மாதம் 3 நாட்கள் மருத்துவ பரிசோதனைக்காக மன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது தான் மன்னர் சார்லஸ்சுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதால், பொது வெளியில் நடைபெறும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். 


இருப்பினும், தனது வழக்கமான மற்ற பணிகளை மன்னர் மேற்கொள்வார். மேலும், தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவித்து, உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மன்னர் கூறியுள்ளார்.


மன்னர் சார்லஸ் தனது சிகிச்சை குறித்து முற்றிலும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூடிய விரைவில் முழுமையாக பணிக்குத் திரும்புவார் என்றும் அரண்மனை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இவருடைய நோயின் தன்மை எந்த அளவில் உள்ளது என்பது குறித்த எந்த தகவலையும் பக்கிங்கஹாம் அரண்மனை தெரிவிக்கவில்லை. இங்கிலாந்து மக்கள் மன்னரின் நிலை அறிந்து மிகுந்த கவலையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


பிரதமர் மோடி பிரார்த்தனை




இதற்கிடையே மன்னர் சார்லஸின் உடல் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், மன்னர் சார்லஸ் விரைவில் குணமடைய கோடிக்கணக்கான இந்தியர்களுடன் நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று தெரிவித்துளார் பிரதமர் நரேந்திர மோடி.