Kilambakkam Bus stand.. "ஆஹா.. சூப்பரா இருக்குய்யா புது பஸ் ஸ்டாண்டு".. பயணிகள் ஹேப்பி!

Su.tha Arivalagan
Dec 31, 2023,05:32 PM IST

சென்னை: சென்னையின் புதிய அடையாளமாக மாறியுள்ள கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இன்று முதல் முழு அளவில் செயல்படத் தொடங்கியுள்ளது. தென் மாவட்ட பேருந்துகள் தற்போது இந்த பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன, இந்த பேருந்து நிலையத்தோடு நிறுத்தப்படுகின்றன.


புதிய பஸ் நிலையம் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.  குறிப்பாக அதன் பிரமாண்ட வடிவமைப்பு, இன்டீரியர் டிசைன், அழகான கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துமே பயணிகளைக் கவர்ந்துள்ளது. வெளியூர்களிலிருந்து வருவோரும், வெளியூருக்குப் போவதற்காக இந்த பஸ் நிலையத்துக்கு வருவோரும், அப்படியே பஸ் ஸ்ண்டாட்டையும் சுற்றிப் பார்த்து மகிழ்கிறார்கள். செல்பி எடுத்துக் குவிக்கிறார்கள்.


சென்னையைப் பொறுத்தவரை முன்பு பிராட்வே பஸ் நிலையம்தான் சென்டிரல் பஸ் நிலையமாக இருந்தது. மொத்த வெளியூர்ப் பேருந்துகள், அரசுப் பேருந்துகள், திருவள்ளுவர் அரசுப் பேருந்துகள் இந்தப் பகுதியிலிருந்து வந்து போய்க் கொண்டிருந்தது. சென்னை நகரின் மக்கள் தொகை விரிவடைந்து வந்ததைத் தொடர்ந்த இந்த பஸ் நிலையத்திலிருந்து வெளியூர்ப் பேருந்துகளை இயக்குவது மிகவும் கடினமாக மாறியது.




இதையடுத்து மறைந்த கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கோயம்பேடு பஸ் நிலையம் திட்டமிடப்பட்டது. அது அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்த பஸ் நிலையம் வந்த பிறகு சென்னைக்குள் நெருக்கடி குறைந்தது. ஆனால் காலம் ஆக ஆக கோயம்பேடு பேருந்து நிலையமும் போதிய அளவில் நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் வண்டலூரை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையம் அமைக்க திட்டமிடப்பட்டது.


இந்த பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்குப் பேருந்துகளை இயக்கத் தீர்மானிக்கப்பட்டது.. அந்த பேருந்து நிலையம்தான் தற்போதைய திமுக ஆட்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இதைத் திறந்து வைத்தார். இன்று முதல் இந்தப் பேருந்து நிலையம் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது.


புதிய பஸ் நிலையம் பயணிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று முதல் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கான பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படுகின்றன. அதேபோல தென் மாவட்டங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து வரும் பேருந்துகளும் இந்த நிலையத்தோடு நிறுத்தப்படுகின்றன. இங்கு வந்து இறங்கும் பயணிகள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல சிறப்பான லோக்கல் பஸ் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிகபட்சம் அரை மணி நேர காத்திருப்பே இருக்கும். 2 நிமிடத்திற்கு ஒருமுறை, 5 நிமிடத்திற்கு ஒருமுறை, 10 நிமிடத்திற்கு ஒருமுறை என சிட்டி பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரம், ஆவடி, கோயம்பேடு, சோழிங்கநல்லூர், அம்பத்தூர், திருவான்மியூர் என நகரின் அனைத்து மூலைகளுக்கும் சிட்டி பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.


பயணிகளுக்கு இந்த பேருந்து நிலையம் மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தாலும், ஒரே ஒரு குறைதான் உள்ளது.. அது, கோயம்பேடு உள்ளிட்ட நகருக்குள் உள்ளே செல்வோர் இதுவரை அந்த இடத்திற்குப் பக்கம் வரை போக முடிந்தது. ஆனால் தற்போது இங்கே இறங்கி லக்கேஜ்களுடன் சிட்டி பஸ்ஸுக்கு மாற வேண்டியுள்ளது. இது சிரமமாக இருப்பதாக பயணிகள் சிலர் கூறுகின்றனர்.


அதேசமயம், ரயில் மற்றும் மெட்ரோ வசதி வந்து விட்டால் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. எனவே தமிழ்நாடு அரசு அதை விரைவுபடுத்தி ஏற்படுத்திக் கொடுத்தால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் 100 சதவீத வெற்றியைப் பெறும்.