கிளாம்பாக்கத்திலிருந்து.. விருப்பம் போல் பயணம் செய்ய.. இன்று முதல் மாதாந்திர பயண அட்டை விற்பனை!
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை 1000 ரூபாய் மதிப்புள்ள மாதாந்திர பயண அட்டை விற்பனை செய்யப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.
சென்னையில் புறநகர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மிகப்பெரிய கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அமைக்கப்பட்டது .இது கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டது. இதற்கு கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டது.
இந்தப் பேருந்து நிலையம் தற்போது பொதுமக்களின் முழு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு சென்னையில் இருந்து தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு பெருமளவில் பஸ்களும் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல பேருந்து நிலையத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சென்னை பெருநகர போக்குவரத்து குழுமம் அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இன்று முதல் மாதாந்திர பயண சலுகை டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. பேருந்துகளில் பயணிகள் விருப்பம் போல் பயணம் செய்ய, ரூபாய் 1000 மதிப்புள்ள பஸ் பாஸ் ஐ மாதந்தோறும் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். மேலும் மாணவர்களுக்கான 50 சதவிகித சலுகை பயண அட்டையையும் மாதந்தோறும் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.
மூத்த குடிமக்களுக்கான 60 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு கட்டணம் இல்லாமல் பயண அட்டையுடன் 10 டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.