Kilambakkam: மக்களைக் குழப்புவதற்காக திட்டமிட்டு வதந்தி கிளப்புகிறார்கள்.. அமைச்சர் சிவசங்கர்

Su.tha Arivalagan
Feb 11, 2024,02:26 PM IST

சென்னை:  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆம்னி பஸ்காரர்கள் திட்டமிட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக பொய்யான செய்திகளை வதந்திகளை பரப்புவதாக சந்தேகப்படுகிறோம். மக்கள் எந்த வகையிலும் குழப்பமடைய வேண்டாம் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடந்த 2 நாட்களாக பேருந்துகள் பற்றாக்குறை என்ற செய்தி பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொர்பாக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் மற்றும் சிஎம்டிஏ பொறுப்பை வகிக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தனர்.


அதேபோல மீஞ்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிட கட்டுமானப் பணிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:


தேவையற்ற வதந்தி கிளப்புகிறார்கள்




கடந்த 2 நாட்களாக கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகளே இயக்கப்படாதது போல எதிர்க்கட்சித் தலைவரும், இன்னும் சிலரும் தேவையற்ற வதந்திகளை கிளப்பி வருகின்றனர். இங்கிருந்து பஸ்கள் சரிவர  இயக்கப்படாதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.  கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தொடங்கப்பட்ட பிறகு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த பேருந்துகளில், 80 சதவீதம் கிளாம்பாக்கத்திலிருந்தும், 20 சதவீதம் மாதவரத்திலிருந்தும் இயக்கப்படுகிறது.


வழக்கமான முறையில் பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பஸ்களே வராதது போல வதந்தி பரப்புவது தேவையற்ற செயல். 2 நாட்களாக பிரச்சினை நடந்தது நள்ளிரவு நேரத்தில்தான். அதாவது 12 மணி 1 மணி அளவில் நடந்துள்ளது. காலையிலே பிரச்சினை இல்லை. வழக்கமாகவே நள்ளிரவுக்கு மேலே தொலை தூரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பபடுவதில்லை. பாதுகாப்பு காரணத்திற்காக அதுபோல செய்யப்படும்.  திருச்சிக்கு மட்டும்தான் நள்ளிவில் பேருந்துகள் இயக்கப்படும். நீண்ட தூரம் போவோர் அந்த நேரத்தில் போவது பாதுகாப்பானதாக இருக்காது, லாரிகள் அதிக அளவில் அந்த நேரத்தில் இயக்கப்படும் என்பதால் காலம் காலமாகவே  இயக்கப்படுவதில்லை. இதுதான் நடைமுறை. 


உள்நோக்கத்துடன் வரும் கூட்டம் 




ஆனால், 12 மணிக்கு மேல் 200 பேர் திடீரென வந்து நின்று கொண்டு பிரச்சினை செய்திருப்பதைப் பார்க்கும்போது, ஏதோ  உள்நோக்கத்துடன் செய்ததாக தோன்றுகிறது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோர்ட்டை நாடி கோரிக்கை வைத்தனர். நீதிபதியும் சில கோரிக்கைகளை ஏற்கும்படி போக்குவரத்துத் துறைக்கு கருத்து  வழங்கினார்கள். அந்த அடிப்படையில் முடிச்சூர் நிறுத்தம் தயாராகும் வரை கோயம்பேடு பஸ் நிலையப் பகுதியில் உள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளிலிருந்து பயணிகளை ஏற்றுவதற்கும், போரூர் டோல்கேட்,  சூரப்பட்டு போன்ற இடங்களில் ஏற்றுவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.


ஆனால் ஆம்னி பஸ்காரர்கள்  அதை வேறு விதமாக எடுத்துக் கூறி வருகிறார்கள். ஏதோ மீண்டும் கோயம்பேடு பேருந்து நிலையம் இயங்கத் தொடங்கி விட்டது போன்ற தோற்றத்தை சிலர் திட்டமிட்டு ஏற்படுத்த முயல்கிறார்கள். மொத்தமாகவே 525 ஆம்னி பேருந்துகள்தான் இயக்கப்படுகின்றன. இது வார இறுதி நாட்களில். வார நாட்களில் இன்னும் குறைவாகத்தான் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் இங்கேதான் இருக்கின்றன. ஆனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தை இயக்க ஆணை வந்தது போல  தவறான செய்தியை பரப்பினால், அரசுப் பேருந்துகள் குறைவாக இருக்கிறது என்று வதந்தி பரப்பினால், ஆம்னி பேருந்துகளுக்கு அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்று நினைத்து தகவல் பரப்புவதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம்.


மக்களை குழப்ப ஆம்னி பஸ்காரர்கள் முயற்சி




தீபாவளி, பொங்கலுக்கு அதிக அளவில் அரசுப் பேரு்துகள் சிறப்பாக இயக்கப்பட்டன. மக்கள் சிறந்த முறையில் பயணம் செய்தனர்,  எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால் இந்த 2 நாட்கள் தேவையில்லாமல் பிரச்சினையை கிளப்புவதாகத்தான் தோன்றுகிறது. முந்தநாள் இரவு வழக்கமான 133 பேருந்துகளைத் தாண்டி,  இரண்டாவது சனி என்பதால் 70 பேருந்துகள் கூடுதலாகவே இயக்க திட்டமிடப்பட்டது.  ஆனால் கூட்டம் வர வர மாநகரப் பேரு்துகளும், விழுப்புரம் டிப்போவில் இருந்த பேருந்துகளையும் சேர்த்து கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்பட்டன. 


நேற்று இரவு 610 கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. 11.30 மணிக்கு மேல் வந்து பேருந்து கேட்கும்போது, அருகில் இருந்து கொண்டு வந்து விடலாம். ஆனால் வீடுகளுக்குப் போய் விட்ட ஓட்டுநர் டிரைவர்களை அழைத்து வருவது எவ்வளவு சிரமம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வழக்கமாக ஊர்களுக்குச் செல்வோர் இரவு 7 மணி முதல் 10 மணி வரை கூடுதலாக பயணிப்பார்கள்.  அதற்கு மேல் பெரும் கூட்டமாக வருவோர் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது.


ஏப்ரல் வரை பொறுத்திருங்கள்




திருமண நாட்கள், விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள் என அனைத்து சிறப்பு தினங்களிலும் கூடுதலாகவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே மக்கள் குழப்பமடைய வேண்டாம், தேவையற்ற வதந்திகளை நம்பவும் வேண்டாம்.


முடிச்சூர் நிறுத்தம் விரைவில் தயாராகி விடும்.  ஏப்ரலுக்குள் தயாரகி விடும். அதற்குப் பிறகு முழுமையாக கிளாம்பாக்கத்திலிருந்துதான் அனைத்து ஆமனி பேருந்துகளும் இயங்கப் போகின்றன. அதில் மாற்றம் இல்லை. எனவே இந்த இடைக்காலத்தில், தேவையற்ற பேட்டிகளைக் கொடுப்பது, குழப்பத்தை ஏற்படுத்துவது விரும்பத்தகாத செயல், கண்டனத்துக்குரியது. மக்களை குழப்புவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சர் கூறினார்.