பிரம்மாண்ட கிளாம்பாக்கம் பஸ் நிலையம்.. கோலாகல திறப்பு.. நாளை முதல் ஃபுல் சர்வீஸ் தொடக்கம்!
சென்னை: சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்து பேட்டரி காரில் அமர்ந்து பேருந்து நிலையத்தைச் சுற்றிப் பார்த்தார். பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார்.
விழாவில் மாநில அமைச்சர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கடந்த அதிமுக ஆட்சியில் 2012ம் ஆண்டு கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 88 ஏக்கர் பரப்பளவில் இந்த பேருந்து நிலையம் திட்டமிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பணிகள் தொடங்கி நடந்து வந்தன.
தற்போது கோயம்பேடு ஜெ ஜெயலலிதா ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்துதான் அனைத்து வெளியூர்ப் பேருந்துகளும் சென்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து தென் மாவட்டப் பேருந்துகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திட்டமிடப்பட்டு தற்போது அது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, செங்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி , அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான பேருந்துகள் இயக்கப்படும்.
அரசுப் பேருந்துகள் மட்டுமல்லாமல், ஆம்னி பேருந்துகளுக்கும் இங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து நகருக்குள் செல்லவும், நகரிலிருந்து இங்கே வரவும் வசதியாக உள்ளூர்ப் பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையமும் இதுவரை விரிவாக்கம் செய்யும் திட்டம் உள்ளது. அதேபோல கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் திட்டமும் உள்ளது. இவையும் வரும்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும். தற்போது அருகாமை ரயில் நிலையம் என்றால் அது ஊரப்பாக்கம் மற்றும் வண்டலூர் ரயில் நிலையங்கள் ஆகும்.
என்னென்ன வசதி இருக்கு?
கிட்டத்தட்ட ஆறரை லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த பேருந்து நிலையம் பரந்து விரிந்திருக்கிறது. அதி நவீன வசதிகளுடன் பார்க்க விமான நிலையம் போல பளிச்சென காணப்படுகிறது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். இந்த பஸ் நிலையத்திலிருந்து தினசரி கிட்டத்தட்ட 2300 பேருந்துகளை இயக்க அரசு திடச்டமிட்டுள்ளது. கடந்த 12ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட காலிப் பேருந்துகளை இயக்கி சோதனை ஓட்டமும் பார்க்கப்பட்டது.
கிட்டத்தட்ட ரூ. 395 கோடி செலவில் இந்த பேரு்நது நிலையத்தை கட்டி முடித்துள்ளனர். கார் பார்க்கிங், டூவீலர் பார்க்கிங் ஆகியவையும் இங்கு உள்ளன.
தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டோர் ரூம்கள் 2 கட்டப்பட்டுள்ளன. இதுதவிர வங்கி ஏடிஎம் மையமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்காக 100 பேர் பயன்படுத்தும் வகையிலான கழிப்பறையும், பெண்களுக்காக 60 பேர் ஒரே சமயத்தில் பயன்படுத்தக் கூடிய வகையிலான கழிப்பறையும் கட்டப்பட்டுள்ளது.
இதுதவிர டிரைவர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்கு வசதியாக 4 பெரிய அறைகளும் கட்டப்பட்டுள்ளன. இங்கு ஒரே நேரத்தில் 340 டிரைவர்கள் தங்கி ஓய்வெடுக்க முடியும். அவர்களுக்காக தனியாக டாய்லெட்டுகளும் கட்டித் தரப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள் பஸ் நிலையம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன.
20 டிக்கெட் கவுன்டர்கள், 3 டைம் ஆபீஸ், 3 போக்குவரத்து அலுவலகங்கள், 2 ஹோட்டல்கள், 100 கடைகள் என சகல வசதிகளுடன் கூடியதாக இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு நிலையம், துணை மின் நிலையம், கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் ஆகியவையும் இந்த பேருந்து நிலையத்தின் ஒரு அங்கமாக கட்டப்பட்டுள்ளன.
மொத்தம் 14 பிளாட்பாரங்கள் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பஸ்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் ஒரே நேரத்தில் 130 அரசுப் பேருந்துகள், 85 ஆம்னி பேருந்துகளை இயக்க முடியும்.