மதுரையில்.. கண்ணகி போல கையில் சிலம்பு ஏந்தி.. போராடிய குஷ்பு.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்‌!

Manjula Devi
Jan 03, 2025,03:23 PM IST

மதுரை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நீதி கேட்டு கண்ணகி மாதிரி கையில் சிலம்பு ஏந்தி பாஜக நிர்வாகி குஷ்பூ பேரணியில் கலந்து கொண்டார். தடையை மீறி பேரணியில் கலந்து கொண்டதாக  குஷ்பூ உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் அனைவரையும் போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.


அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிராக பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.இந்த விவகாரத்திற்கு நீதி கேட்டு பாஜக, அதிமுக, பாமக, என அனைத்து கட்சியினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து  வருகிறது என்பது நினைவிருக்கலாம்.




இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் இன்று மதுரையில் பேரணி நடைபெற்றது. இதில் பாஜக உறுப்பினர் குஷ்பூ கலந்து கொண்டு கைகளில் சிலம்பு ஏந்தி தமிழகத்தின் அநீதியை தட்டிக் கேட்காமல் கண்ணகித்தாயே உறங்குவது ஏன் என பலரும் கோஷமிட்டனர். 


பல்வேறு இடங்களில் இருந்தும் மதுரையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொள்ள பாஜகவினர் ஒன்று திரண்டனர். அப்போது தடையை மீறி பாஜகவினர் தொடர்ந்து பேரணியில் ஈடுபட்டதால் பாஜகவிற்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கீழே விழுந்த பாஜக நிர்வாகிகளை குஷ்பூ தூக்கி விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து குஷ்பூ உட்பட பாஜக நிர்வாகிகள் அனைவரையும் போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். 


குஷ்பு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில்,  மக்களை திசைத் திருப்புவதற்காக பேசக்கூடாது. மணிப்பூரில் நடந்த பிரச்னை போல தமிழகத்தில் பிரச்னை இல்லை. மணிப்பூரில் எல்லை மீறிய பிரச்னைகள் இருக்கிறது. இதனை புரியாமல் திமுகவினர் பேசுகிறார்கள் என்றால், எதற்காக அவர்கள் அரசியலில் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. 


காங்கிரஸ் ஏன் குரல் கொடுக்கவில்லை. கூட்டணியில் இருக்கின்ற கட்சிகள் உள்ள மாநிலத்தில் ஏன் குரல் கொடுக்கவில்லை. இந்த பேரணிக்கு அனுமதி கொடுப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. திமுக ஆட்சிக்கு எதிராக யார் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் எங்களுக்கு என்றுமே அனுமதி கொடுக்கப்படுவதில்லை. அதற்கு காரணம் எதைப் பேசினாலும் உண்மையை மட்டும் தான் பேசுவோம் என திமுகவிற்கும் நன்றாகவே தெரியும். எனவே அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். என் மண்ணில், கண்ணகி பிறந்த தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன் என்று கூறினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்