நான் முஸ்லிம் தான்... அதனால உனக்கு என்ன?.. ட்விட்டரில் கொந்தளித்த குஷ்பு

Aadmika
Apr 23, 2023,12:46 PM IST
சென்னை : தன்னை முஸ்லிம் என குறிப்பிட்டு கமென்ட் செய்திருந்த நெட்டிசனின் பதிவால் கடுப்பான நடிகை குஷ்பு, படு காட்டமாக அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய மொழி சினிமாக்கள் பலவற்றிலும் நடித்து, பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பு. இவர் முதலில் திமுக.,வில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை துவங்கினார். பிறகு அங்கிருந்து விலகி காங்கிரசில் இணைந்து அதற்கு பிறகு அங்கிருந்தும் விலகி தற்போது பாஜக.,வில் இருந்து வருகிறார். 

அரசியலில் பிசியாக இருந்தாலும் கூட சினிமாவையும் விட்டு விடவில்லை குஷ்பு. தன்னைத் தேடி வருகிற வாய்ப்புகள் தனக்குப் பிடித்திருந்தால் தொடர்ந்து நடிக்கவும் செய்கிறார். கூடவே,  தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் சமீபத்தில் பொறுப்பேற்றார் குஷ்பு. இப்படி பல்துறைகளிலும் தீவிரமாக செயலாற்றும் குஷ்பு, குடும்பத்தையும் விட்டு விடவில்லை.. அதிலும் தனது இருப்பை சூப்பராக வெளிப்படுத்தி அழகாக வாழ்க்கையை பேலன்ஸ் செய்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது டாக்டர்கள் அறிவுரையின் படி வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். ஒரு சின்ன கேப்பிற்கு பிறகு கடந்த சில நாட்களாக மீண்டும் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வருகிறார் குஷ்பு. 




இன்று காலை எலான் மஸ்க் தனது ப்ளூ டிக்கை திரும்ப அளித்ததற்காக நன்றி தெரிவித்து ட்விட் போட்டிருந்தார். சிறிது நேரத்தில் மிக கடுமையாக ஒரு ட்வீட் ஒன்றை பதிவிட்டார் குஷ்பு. எதற்காக இந்த போஸ்ட் என பார்த்தால், நெட்டிசன் ஒருவர், " முஸ்லிமா...தொப்பி, தாடி வச்சா முஸ்லிமா...இல்லை பெயர் வைத்து கொண்டா முஸ்லிமா...முஸ்லிம் பெயர் தாங்கிகள் என ஒரு கூட்டம் உண்டு...அதில் நீ ஒருத்தி.." என ஒருமையில் குறிப்பிட்டு கமெண்ட் போட்டிருந்தார். 

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த குஷ்பு, " திராவிட பங்கின் மீதான எனது மரியாதை இன்னும் தொடர்கிறது. பல அவநம்பிக்கைகளையும் கவனிக்க வேண்டும். இப்போது எழுத்தாளர்கள் கூட இரண்டு நிமிட புகழுக்காக ட்ரோல் செய்யப்படுகிறார்கள். அப்புறம் உங்களின் கருத்திற்கு எனது பதில், ஆமாம். நான் முஸ்லிமாக தான் பிறந்தேன். முஸ்லிமாக தான் இறக்கவும் போகிறேன். அதனால் இப்போது என்ன? அதுவும் உனக்கு என்ன பிரச்சனை? அது உன்னுடைய பிரச்சனை. டை, காசு, பணம், பெருமை, அந்தஸ்து, புகழ், எல்லாம் பார்த்துட்டு உன் கட்சிக்கு வந்தேன் டா. அப்போ காசா அல்லது பதவி வாங்கினேன்? போய் உன் தலைவனுக்கு ஜால்ரா தூக்கு போ.. என்னை போன்றவர்கள் விலகி போனாலும் இப்போதும் நீங்கள் துரத்தி வேட்டையாடிக் கொண்டிருக்கிறீர்கள்" என செம காட்டமாக ட்வீட் போட்டுள்ளார்.

குஷ்புவின் இந்த ட்வீட்டிற்கு லைகுகள் மற்றும் பார்வைகள் குவிந்து வருகிறது. பலரும் குஷ்புவின் கருத்திற்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். கூடவே விமர்சனங்களும் வழக்கம்  போல குவிந்து வருகின்றன.