கோகலாகலமாக நிறைவடைந்தது கேலோ இந்தியா.. 98 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்த தமிழ்நாடு!
சென்னை: கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற்றன. 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் தமிழக அணி 2வது இடத்தை பெற்று அசத்தியுள்ளது.
மத்திய அரசின் விளையாட்டுத்துறை சார்பில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19ஆம் தேதி இந்த விளையாட்டுப் போட்டியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
முதல் 3 இடங்களை பெற்றவர்கள்
இந்த கேலோ இந்திய போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. இந்தப் போட்டியில் மகாராஷ்டிரா 57 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 158, பதக்கங்கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.
தமிழ்நாடு 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 98 பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஹரியானா 35 தங்கம் , 22 வெள்ளி, 46 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
நிறைவு விழா
சென்னை கலைவாணர் அரங்கில் நிறைவு விழா மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விழாவில், மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்க உள்ளார்கள்.
கேலோ இந்தியா போட்டிகளில் 26 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. 26 போட்டிகளில் மொத்தம் 933 பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதில் 278 தங்கம், 278 வெள்ளி, 377 வெண்கலப் பதக்கங்கள் ஆகும். 6000 போட்டியாளர்கள் கலந்துகொண்டு விளையாடினார்கள்.