கேரளாவில்.. அடுத்த 24 மணி நேரத்தில் மிக மிக கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Manjula Devi
Jul 30, 2024,10:39 AM IST

வயநாடு:   கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து ஏற்கனவே கன மழை புரட்டி போட்டுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.


கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்தது. பின்னர் மழையின் தீவிரம் குறைந்து அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து கன முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக வயநாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர் கனமழை பெய்து வரும் நிலையில்  முண்டக்கை சூரல்மலை  என்ற இடத்தில் இன்று அதிகாலை பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. 




இந்த நிலச்சரிவில் 400 குடும்பங்கள் சிக்கி உள்ளன. இந்த நிலச்சரியில் சிக்கியவர்களில் இதுவரை இரண்டு குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க ஒன்பது பேர் கொண்ட குழுக்கள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ராணுவமும் மீட்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அரக்கோணத்திலிருந்து மீட்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர்.


இந்த நிலையில் கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 21 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கேரளாவில் இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கேரள முதல்வர் பினராயி விஜயனிடம்,பிரதமர்  நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வயநாடு நிலச்சரிவு குறித்து தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தனர் . இந்த நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தோருக்கு தலா 2 லட்சம் நிவாரணத் தொகையும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50000 நிவாரணத் தொகையும் வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.