அசைவ உணவுக்காக செலவிடுவதில்.. கேரளாதான் டாப்.. தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் சர்வேயில் சுவாரஸ்யம்!

Manjula Devi
Jun 12, 2024,05:18 PM IST

திருவனந்தபுரம்:   2022-23 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின் படி, அசைவ உணவுக்காக அதிக செலவிடும் மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதலிடம் இடத்தை பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அசாம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாம்.


வாழ்க்கையில் மனிதன் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது உணவு. உணவுகள் நமது உடலின் செயல்பாட்டிற்கும் இயக்கத்திற்கும் சிறந்த ஆற்றலைத் தருகிறது. உணவுகள் உலகத்தில் பல வகைகளில் உள்ளன. ஆரம்ப கால மனிதன் அதிக அளவில் சைவ உணவு உண்டிருக்கலாம்.. ஆனால் பின்னர் அவன் அசைவத்தைக்  கண்டுபிடித்த பின்னர் அசைவம் நமது சாப்பாட்டில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. 




குறிப்பாக நம் நாட்டில் நடப்பன, ஓடுவன, பறப்பன, போன்றவற்றை உட்கொள்வதில்  அசைவ பிரியர்கள் ஏராளம். அதிலும் ஆடு, கோழி, மீன், முட்டை, போன்றவற்றின் அலாதியான சுவையில் தனிப்பட்ட மனிதனின் விருப்பம்  அதிகம். இந்த நிலையில் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் ஒரு சர்வேயை நடத்தியது. அதில் எந்த வகையான உணவுகளுக்காக மக்கள் அதிக அளவில் செவிடுகிறார்கள் என்ற சர்வேதான் அது.


அந்த வரிசையில் கேரளாவில் அசைவ உணவிற்காக அதிகளவு செலவு செய்கின்றனராம். மற்ற மாநிலங்களை விட கேரளா மக்கள் அதிக அளவு அசைவ உணவுகளை உட்கொள்கின்றனராம். குறிப்பாக மாட்டு இறைச்சி கேரளாவில் அதிக அளவு உட் கொள்ளப்படுகிறது. 

இந்த நிலையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் உணவு புள்ளியியல் விவரங்களை வெளியீட்டு உள்ளது.  கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் மீன் முட்டை மற்றும் இறைச்சி உணவுகளை உட்கொள்வதில் கேரளா முதலிடத்தில் உள்ளதாம். 


நாட்டிலேயே அதிகமாக கேரளாவில் கிராமப்புற மக்கள் அசைவ உணவுக்காக 23.5% செலவு செய்வதாகவும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் 19.8 சதவீதம் செலவு செய்வதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.




கேரளாவிற்கு அடுத்தபடியாக அசைவ உணவு செலவினங்களில் அசாம் மாநிலம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மொத்த அசைவ உணவு செலவினத்தில் 20 சதவீதத்தை முட்டை, மீன் மற்றும் இறைச்சிக்காக செலவிட்டு வருகிறதாம். இதற்கு அடுத்தப்படியாக அசைவ உணவு செலவினத்தில்  ஆந்திரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.  ஆந்திராவில் கிராமப்புறங்களில் 14.8% ஆகவும் நகர்ப்புறங்களில் 11.9% செலவினம் உள்ளது. 


தெலுங்கானாவில் கிராமப்புற மக்களின் அசைவ உணவு செலவினமானது15.8 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில்11.9% உள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் கிராம மற்றும் நகர்ப்புற மக்கள் தங்கள்  உணவு பட்ஜெட்டில் 18.9% அசைவ பொருள்களுக்கு செலவிடுகின்றனர்.


மறுபக்கம், ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், உள்ளிட்ட மாநிலத்தில் பால் பொருட்களுக்காக அதிகம் செலவிடுகின்றனராம்.


சரி நீங்க எந்த உணவுக்காக அதிகம் செலவழிப்பீங்க.. சொல்லுங்க அதையும் கேட்போம்.