வயநாடு நிலச்சரிவு.. அடாத மழையிலும் விடாமல் போராடும் மீட்பு படையினர்.. தமிழர்களுக்கு உதவி எண்கள்!

Manjula Devi
Jul 31, 2024,07:55 PM IST
வயநாடு:  வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழையை பொருட்படுத்தாமல் மீட்புப் பணியினை பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக செய்து வருகின்றனர். 


இதற்கிடையே, நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள், தமிழ்நாட்டிலிருந்து சுற்றுலா சென்ற பயணிகள் 1070 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம் என முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தொடர் கனமழை காரணமாக வயநாடு முண்டக்கை சூரல் மலைப்பகுதியில் நேற்று அதிகாலை திடீரென பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கினர். இதனை அடுத்து ஒன்பது பேர் கொண்ட மீட்பு படையினர் பல மணி நேரமாக போராடி  காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அரக்கோணத்தில் இருந்தும் மீட்பு குழு கேரளா விரைந்து பணிகளை செய்து வருகிறது. இந்த நிலச்சரிவிலிருந்து இதுவரை 1000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.




இது தவிர இப்பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் சிக்கி தவித்த நிலையில் தற்காலிக பாலம் அமைத்து ஆற்றின் அருகே கயிறு கட்டி ஒவ்வொருவராக ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.இதுவரை நிலச்சரிவில் சிக்கி 151 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கிய 211 பேரில் நிலைமை குறித்து இன்னும் தகவல் எதுவும் வெளிவரவில்லை.


சாலியாற்றில் மிதந்த உடல்கள்:


வயநாடு நிலச்சரிவில் சிக்கியுள்ள 51 உடல்கள் மாமல்லபுரம் அருகே உள்ள சாலியாற்றில் மிதந்து வந்தது. இதைக்கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பேரிடர் மீட்பு குழுவினர் ஆற்றல் மிதந்து வந்த 51 உடல்களையும் மீட்டனர். இதில் 26 உடல்கள் மட்டுமே முழுமையாக மீட்கப்பட்டது. எஞ்சிய உடல்கள் கை, கால்கள் தலை சிதைந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் கேரளாவில் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருகிறது. ஆனாலும் கூட மழையைப் பொருட்படுத்தாமல் 150க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இரண்டாவது நாளாக மீட்பு பணியை துரிதமாக செய்து வருகின்றனர். தற்போது நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்ட 3069 பேர் 45 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உயிருடன் மீட்கப்பட்ட இவர்கள் அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதற்கிடையே, நிலச்சரிவு ஏற்பட்ட அட்டமலை என்ற பகுதியில் குடும்பமாக தங்கியிருந்த 80 வட மாநில தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 




நிலச்சரிவு சம்பவத்தை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள சுரங்கம், கட்டுமான பணிகள், சாலை பணிகள் குறித்த அறிக்கையை அனுப்பவும் கேரளா அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல்: 


வயநாடு இயற்கை பேரிடர்களில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தத்தையும், இரங்கல்களையும் தெரிவித்துள்ளார். மேலும்,  தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும், அத்துடன் முதல்வரின் உத்தரவின் படி மீட்பு பணியில் ஈடுபட ஐஏஎஸ் மூத்த அதிகாரிகள் மருத்துவம் மற்றும் மீட்புக் குழு கேரளா விரைந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரி செய்ய தமிழக அரசு சார்பில் கேரளா அரசுக்கு பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். 


நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள்,நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த காளிதாஸ் மற்றும் கல்யாண குமார் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் சுற்றுலா சென்றவர்கள் 1070 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.