உரிமை கோரப்படாத.. இறந்த உடல்களை விற்று.. ரூ. 3.66 கோடி வருவாய் ஈட்டிய கேரள அரசு!

Su.tha Arivalagan
Mar 09, 2024,01:20 PM IST
திருவனந்தபுரம்: கேரள அரசு மருத்துவமனைகளில் யாராலும் உரிமை கோரப்படாத இறந்த உடல்களை விற்று அதன் மூலம் ரூ. 3.66 கோடி வருமானம் ஈட்டியுள்ளது அந்த அரசு.

கேரள அரசு மருத்துவமனை மார்ச்சுவரிகளில் ஏராளமான இறந்த உடல்கள்  பராமரிக்கப்பட்டு வருகின்றன். விபத்தில் சிக்கி உயிரிழந்தோர், பொது இடங்களில் உயிரிழந்தோர் உள்பட பலரது உடல்கள் இதுபோன்று பராமரிக்கப்பட்டு வருகின்றன. பல உடல்கள் நீண்ட காலமாக பதப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பராமரிக்க அரசு நிறைய செலவிட வேண்டியிருப்பதால் நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் உள்ள உடல்களை, தனியார் மருத்துவமனைக்கு மாணவர்களின் ஆய்வுக்காக விற்பனை செய்ய முடிவு செய்தது கேரள அரசு.



அதன்படி கடந்த 2008ம் ஆண்டு முதல் கிடப்பில் உள்ள இறந்த உடல்களை விற்கத் தொடங்கியது கேரள அரசு. இதுவரை 1122 இறந்த உடல்கள் பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் படிப்புக்கு தேவையான உடல்கள் தங்கு தடையின்றி கிடைத்ததோடு, அரசுக்கும் நல்ல வருவாய் கிடைத்துள்ளது. இதுவரை ரூ. 3.66 கோடி அளவுக்கு கேரள அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளதாம்.

பதப்படுத்தப்பட்ட உடல்களின் விலை ஒரு பிரேதத்துக்கு ரூ. 40,000 ஆகும். பதப்படுத்தப்படாத உடல் என்றால் அதன் விலை ரூ. 20,000 ஆகும். எர்ணாகுளம் அரசு மருத்துவமனைதான் அதிக அளவிலான உடல்களை விற்றுள்ளது. அதாவது கடந்த 16 வருடங்களில் 599 உடல்களை எர்ணாகுளம் ஜிஎச் விற்பனை செய்துள்ளது.  அடுத்து பரியாரம் மருத்துவக் கல்லூரி 166 உடல்களையும், திருச்சூர் மருத்துவக் கல்லூரி 157 உடல்களையும், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 99 உடல்களையும் விற்றுள்ளன.

மருத்துவக் கல்லூரி விதிப்படி, 60 மாணவர்களைக் கொண்ட வகுப்புக்கு குறைந்தது 5 உடல்கள் படிப்புக்காக தேவைப்படுமாம். அதாவது சராசரியாக 12 மாணவர்களுக்கு ஒரு இறந்த உடல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.