துயரில் இருக்கும் கேரளாவுக்கு உதவுங்கள்.. நிதியுதவி அளியுங்கள்.. முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை

Su.tha Arivalagan
Jul 31, 2024,07:55 PM IST

திருவனந்தபுரம்: வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலத்திற்கு நல்லுள்ளம் படைத்தவர்கள் உதவிட வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மிகப் பெரிய மோசமான நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல கிராமங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வீடுகள் புதைந்து போய் விட்டன. பெரும் சேதத்தை இந்தப் பகுதிகள் சந்தித்துள்ளன.


முதல் ஆளாக உதவிய தமிழ்நாடு




கேரள மாநிலத்தை நிலை குலைய வைத்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முதல் ஆளாக தமிழ்நாடு, கேரள மாநிலத்திற்கு ரூ. 5 கோடி நிதியுதவியை அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தத் தொகையை அமைச்சர் எ வ வேலு இன்று திருவனந்தபுரத்திற்குப் போய் முதல்வர் பினரயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார். இதேபோல நடிகர் விக்ரமும் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் பலரும் உதவி செய்ய ஆரம்பித்துள்ளனர்.


இந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன், நிதியுதவி கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்த சோகமான சமயத்தில், அனைவரும் இணைந்து கை கோர்த்து இந்தத் துயரிலிருந்து விடுபட்டு வர உதவ வேண்டும். யாரும் தனியாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். உங்களது உதவி எவ்வளவு சிறிதாக இருந்தாலும் பரவாயில்லை, அது ஒரு மாற்றத்திற்கு, நிவாரணத்திற்கு வித்திடும் என்று கூறியுள்ளார்.


நிதியுதவி செய்ய விரும்புவோர் அதை செலுத்த வேண்டிய கணக்கு விவரம்:


A/c Number : 39251566695

A/c Name: CHIEF MINISTER’S DISTRESS RELIEF FUND 

Branch: City Branch, Thiruvananthapuram

IFSC : SBIN0070028 | SWIFT CODE : SBININBBT08

Account Type: Savings | PAN: AAAGD0584M