"சார் மேடம்" எல்லாம் தேவையில்லை.."டீச்சர்" மட்டும் போதும்.. கேரளாவில் புரட்சி!
Jan 16, 2023,10:57 AM IST
திருவனந்தபுரம் : ஆசிரியர்களை சார், மேடம் என்றெல்லாம் கூப்பிடத் தேவையில்லை. வெறுமனே டீச்சர் என்று கூப்பிட்டால் போதும் என்று கேரள மனித சிறார் உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்களை பாலின பாகுபாட்டுடன் அழைப்பதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று கேரள சிறார் உரிமைகள் ஆணையத்திற்குக் கோரிக்கை வந்தது. இதையடுத்து ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அனைத்துப் பள்ளி ஆசிரியர்களையும், பாலின வேறுபாடு இன்றி அனைவருமே இனி டீச்சர் என்று மட்டுமே சொல்ல வேண்டும். சார், மேடம் என்று சொல்லக் கூடாது என்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. சார், மேடம் என்பது பாலின வேறுபாட்டை வெளிக்காட்டுகிறது. மாறாக டீச்சர் என்பது பொதுப்படையாக உள்ளது, மரியாதைக்குரியதாகவும் இருக்கிறது என்று ஆணையம் விளக்கியுள்ளது.
இதுதொடர்பான உரிய சுற்றறிக்கையை அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்புமாறு மாநில பள்ளிக் கல்வித்துறையையும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.