கேரளா குண்டுவெடிப்பு சம்பவம்... தமிழக எல்லையோர மாவட்டங்களில் உஷார் நிலை
சென்னை : கேரளாவில் மத வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் சோதனையை தீவிரப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் மத வழிபாட்டு தலத்தில் டிபன் பாக்ஸ் குண்டுவெடித்தது. ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குண்டுவெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் நீல நிற கார் ஒன்று அங்கிருந்து புறப்பட்டு சென்றது தெரிய வந்துள்ளது. நீல நிற காரில் சென்றவர்கள் யார், அவர்களுக்கும் குண்டுவெடிப்பிற்கும் என்ன தொடர்பு என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கேரளாவின் எல்லையை ஒட்டிய தமிழக மாவட்டங்களான கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தமிழக போலீசாருடன் வனத்துறையும் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.