கொச்சி வழிபாட்டுத் தலத்தில் வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு.. உறுதி செய்தார் டிஜிபி!

Su.tha Arivalagan
Oct 29, 2023,09:57 PM IST

கொச்சி:  கேரள மாநிலம் கொச்சியில் ஜெகோவா வழிபாட்டுக் கூடத்தில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் பலியானார். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.  வெடித்தது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு என்று தெரிய வந்துள்ளது.


கொச்சியில் உள்ள கலமசேரி பகுதியில் உள்ள சம்ரா சர்வதேச மாநாட்டு அரங்கில் ஜெகோவா வழிபாட்டுக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. அப்போது அடுத்தடுத்து பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது.. அதில் கூட்டத்தில் இருந்த பலர் சிக்கிக் கொண்டனர். அந்தக் கூடத்திலும் தீப்பிடித்துக் கொண்டது. இதில் சிக்கி ஒரு பெண் பலியானார். 20க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி காயமடைந்தனர்.


உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்புப் படையினரும், ஆம்புலன்களும் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் கொச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 






ஒரு குழந்தை உள்பட 7 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் காக்கநாடு பகுதியில் உள்ள சன்ரைஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்குள்ள ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் பெரிதாக இருப்பதால் கொச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் உடனடியாக பணிக்கு வருமாறும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். கலமசேரி அரசு மருத்துவமனை, எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனை, கோட்டம் அரசு மருத்துவமனை ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  கோட்டயம் அரசு மருத்துவமனை தீத் தடுப்புப் பிரிவு மருத்துவர்கள் கலமசேரி அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.


குண்டுவெடிப்புதான் - டிஜிபி தகவல்




குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். இது மிகப் பெரிய கூடமாகும். இது மிகப் பெரிய சர்வதேச மாநாட்டு அரங்கம் ஆகும். வழிபாட்டுக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் பெரும்பான்மையானோர் அங்கமாலி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.


இந்த நிலையில் சம்பவ இடத்தை நேரில் பார்த்து ஆய்வு செய்த கேரள மாநில டிஜிபி இது குண்டுவெடிப்புதான் என்று உறுதிப்படுத்தினார். சதியாளர்களைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணைக்குப் பிறகே முழு விவரமும் தெரிய வரும். சதி செய்த அனைவரும் விரைவில் பிடிபடுவார்கள். குண்டுவெடிப்புக்கு தீவிரவாத இயக்கங்கள் ஏதேனும் பின்னணியில் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும்.


குண்டுவெடிப்புக்கு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. தனிப்படையினரின் விசாரணையில் பிற தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். விசாரணை முடியும் வரை அனைவரும் பொறுமை, அமைதி காக்க வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.