அலங்காநல்லூரில் மிஸ் ஆன கார்.. கீழக்கரை ஜல்லிக்கட்டில் சிக்கிய "ஜீப்".. அசத்திய அபி சித்தர்!

Su.tha Arivalagan
Jan 24, 2024,07:12 PM IST

மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடத்தை ஜஸ்ட் மிஸ் செய்த சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர், கீழக்கரை ஜல்லிக்கட்டில் 10 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பிடித்து மகிந்திரா தார் ஜீப்பை பரிசாக வென்றார்.


மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் ஜல்லிக்கட்டுப் போட்டியையும் அவர் தொடங்கி வைத்தார்.


வித்தியாசமான சூழலில், கிரிக்கெட் போட்டி போல தரமான சம்பவமாக இன்றைய ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மிகவும் பாதுகாப்பாகவும், சவுகரியமாகவும் அமர்ந்து போட்டியைக் கண்டு ம்கிழ்ந்தனர்.




500க்கும் மேற்பட்ட காளைகள் இப்போட்டியில் கலந்து கொண்டன. 300க்கும் மேற்பட்ட வீரர்கள் அதில் கலந்து கொண்டனர். மாலை போட்டி முடிவடைந்தபோது சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் 10 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்தார். அவருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் மகிந்திரா தார் ஜீப் பரிசாக வழங்கப்பட்டது.


சின்னப்பட்டி தமிழரசன் மற்றும் மதுரை பரத்குமார் ஆகிய இருவரும் தலா 6 காளைகளை அடக்கி பைக்கை பரிசாகப் பெற்றனர். 4 காளைகளை அடக்கிய மணிகண்டன் 3வது இடத்தைப் பிடித்தார்.


புதுக்கோட்டை குணா கருப்பையாவுக்குச் சொந்தமான காளை சிறந்த காளையாக முதல் பரிசாக மகிந்திரா தார் ஜீப்பையும், ரூ. 1 லட்சத்தையும் பரிசாக பெற்றது. திருச்சி அணைக்கரை வினோத் என்பவரின் காளை 2வது பரிசாக பைக்கைப் பரிசாக பெற்றது. மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த பிரேம் என்பவரின் காளைக்கு 3வது பரிசு கிடைத்தது.


அலங்காநல்லூரில் ஜனவரி 17ம் தேதி நடைபெற்ற பொங்கல் ஜல்லிக்கட்டில் அபி சித்தர் 2வது பரிசைப் பெற்றார். அவர் அப்போது 17 காளைகளை அடக்கியிருந்தார். 18 காளைகளை அடக்கிய மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் முதலிடத்தைப் பிடித்து காரைப் பரிசாக வென்றார். ஆனால் போட்டியில் முறைகேடு நடந்து விட்டதாகவும், அமைச்சர் மூர்த்தி மீது குற்றம் சாட்டியும் அபி சித்தர் கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து கலெக்டரிடமும் அவர் புகார் கொடுத்தார்.


இந்த நிலையில் இன்றைய போட்டியில் அபி சித்தர் கலந்து கொண்டு ஜீப்பை பரிசாக தட்டிச் சென்றார். அவரை சக வீரர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.