Finally காவ்யா ஹேப்பி அண்ணாச்சி.. என்னா ஒரு ஜாலி உற்சாகம் ஹேப்பி.. அதிர வைத்த சன்ரைசர்ஸ்!

Su.tha Arivalagan
Mar 28, 2024,07:17 PM IST

ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நேற்றைய தினம் மறக்க முடியாத ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நாளாக அமைந்துவிட்டது.


ஐபிஎல் போட்டியில் மிகப் பிரமாண்டமான ஒரு ஸ்கோரை எட்டிய அவர்கள் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது என்று சொன்னால் அது வெறும் செய்தி.. இடையில் நடந்த அத்தனை சம்பவங்களையும் அவர்கள் இன்னும் பல சீசன்களுக்கு நினைவு கூர்ந்திருப்பார்கள்.


ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் நிகழ்த்திய பேட்டிங் சாதனைகள், சிக்ஸர் சாதனைகள், புயல் வேகப் பேட்டிங் என முதல் இன்னிங்ஸில் பட்டையைக் கிளப்பிய அவர்கள் பின்னர் அருமையான பவுலிங்கிலும், பீல்டிங்கிலும் சாதித்தது என்று பல கதைகள் இதில் புதைந்துள்ளன.. இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல, ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் நேற்று அடைந்த சந்தோஷத்தைப் போல இதற்கு முன்பு அடைந்திருப்பாரா என்று தெரியில்லை. இன்னும் சில சீசன்களுக்கு இதை அவர் மறக்கவும் மாட்டார். அப்படி ஒரு உச்சகட்ட சந்தோஷம் நேற்று, காவ்யாவுக்கு மட்டுமல்ல, சன்ரைசர்ஸ் அணிக்கும் கூடத்தான்.




ஐபிஎல் வரலாற்றில் மிக அதிகபட்ச ஸ்கோராக மூன்று விக்கெட் இழப்புக்கு 277 ரன்களை நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் குவித்தது. முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவல்ஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா மற்றும் ஹேண்ட்ரிச் கிளாஸன் ஆகியோர் மிகப்பிரமாண்டமான ரன் குவிப்புக்கு வித்திட்டனர். டிராவல்ஸ் ஹெட்டுக்கு இதுதான் முதல் ஐபிஎல் சீசன் ஆகும். முதல் சீசனிலேயே அவர் பிரித்து மேய்ந்து விட்டார். 24 பந்துகளில் 62 ரன்கள் அவர் விளாசினார். அதேபோல் அபிஷேக் ஷர்மா 23 பந்துகளில் 63  ரன்களைக் குவித்தார். ஹென்ரிச் கிளாஸன், 80 ரன்கள் எடுத்த ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதேபோல அய்டன் மார்கரம் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  இதன் காரணமாக ஹைதராபாத் அணி மிகப் பெரிய வரலாற்று ஸ்கோரை எட்டியது. 


இதற்கு முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 2013-ல் எடுத்த 5 விக்கெட் இப்புக்கு 263 ரன்கள் என்ற ஸ்கோரே மிக உச்சபட்ச ஸ்கோராக இருந்தது. அந்த வரலாற்றை நேற்று ஹைதராபாத் அணி தகர்த்து விட்டது. அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அடி தோற்கடித்து பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. நேற்றைய போட்டியின் போது ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவியா மாறன் அனைவரின் கண்களையும் கவர்ந்தார். ஸ்டேடியத்தில் அவர் உற்சாகத்துடன், தனது வீரர்கள் பேட்டிங் செய்தபோதும் சரி பந்துவீச்சில் விக்கெட் விழுந்தபோதும் சரி துள்ளி குதித்து மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.


அவர் மகிழ்ச்சியுடன் காணப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நேற்றைய நாளில் மிக மிக மகிழ்ச்சியான ஒரு மனிதர் யார் என்றால் அவர் காவியா மாறன் தான் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சந்தோஷத்துடன் குறிப்பிட்டு அதை வைரல் ஆக்கி வந்தனர். தனது வீரர்களுக்காக உற்சாகப்படுத்துவதிலும் அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதிலும் காவியா மாறனுக்கு நிகர் யாருமில்லை. அவர் தனது அணியினர் பேட்டிங் செய்தபோது துள்ளி குதித்தபடி வீரர்கள் எடுத்த ஒவ்வொரு ரன்னுக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்தியடியே இருந்தார். அதேபோல தனது பந்துவீச்சாளர்கள் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தியபோது, குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மாவின் விக்கெட் வீழ்ந்த போது அப்படி ஒரு ஆட்டம் போட்டு சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார் காவியா மாறன். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.


சும்மாவே காவ்யா மாறனுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு, இப்போது அது பல மடங்கு அதிகரித்து விட்டது.