"கொடைக்கானலா.. கோடைக்கானலா".. போற போக்குல கச்சா முச்சான்னு எழுதறோம்.. கவிஞரின் வருத்தம்!

Su.tha Arivalagan
Mar 06, 2024,09:36 PM IST

"உண்டான காயமெங்கும்…

தன்னாலே ஆறிப் போன மாயம் என்ன…

பொன்மானே பொன்மானே…

என்ன காயம் ஆன போதும்…

என் மேனி தாங்கிக் கொள்ளும்…

உந்தன் மேனி தாங்காது செந்தேனே…

எந்தன் காதல் என்னவென்று…

சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது…

எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்…

என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது…

மனிதர் உணர்ந்து கொள்ள…

இது மனிதக் காதலல்ல…

அதையும் தாண்டிப் புனிதமானது…"


எங்க பார்த்தாலும், பலரும் உருக்கமாக, மெய் மறந்து, நிலை குலைந்து, நிலை மறந்து.. ஒரு மார்க்கமாகத்தான் திரிகிறார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இந்த "குணா"தான்.. குணா படம் வந்தப்ப கூட இப்படி யாரும் திரிந்ததில்லை. ஆனால் குணா பட மென்ஷன்களைக் கொண்டு, அந்தப் பாடலைக் கொண்டு வெளி வந்த "மஞ்ச்சும்மல் பாய்ஸ்" மலையாளப் படத்தை அப்படி கொண்டாடித் தீர்க்கிறார்கள் மக்கள். உண்மையில் கமல்ஹாசனுக்குப் போகும் கிரெடிட்டில் சரி பாதி பங்கு இளையராஜாவுக்கும் போக வேண்டும்.. காரணம், "குணா" என்ற "பங்கு ஆட்டோ"வில் இருவருமே சமமாக பயணித்து சாதித்தவர்கள்.


சரி அதை விடுங்க.. அது "கொடைக்கானல்" இல்லை.. "கோடைக்கானல்".. நிறையப் பேருக்கு இது தெரிவதில்லை. கொடைக்கானல் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். மஞ்சும்மல் பாய்ஸ் படத்திலிருந்தாவது நாமெல்லாம் திருந்தி கோடைக்கானல் என்று சொல்வோமே.. அதுக்கு முன்னாடி நம்ம கவிஞர் மகுடேஸ்வரன் இதுதொடர்பாக  கொடுத்துள்ள ஒரு அருமையான விளக்கத்தைப் பார்ப்போமா.


"அபிராமியே தாலாட்டும் சாமியே…

நான் தானே தெரியுமா…

சிவகாமியே சிவனில் நீயும் பாதியே…"


குணா சார் கொஞ்சம் ஓரமா உக்காருங்க.. விளக்கத்தைப் பார்த்துட்டு வந்து மிச்சப் பாட்டையும் கேட்டுக்கிறோம்.. இனி Over to Magudeswaran




கிழக்கிலிருந்து வீசும் காற்றுக்குக் கொண்டல் என்று பெயர். இது மழையைக்கொண்டு வரும். மழைச்சூல் கொண்ட முகிலிற்கும் கொண்டல் என்று பெயர்.  வடக்கிலிருந்து வீசும் காற்றுக்கு வாடை என்று பெயர். இந்தக் காற்றினால் குளிர் வருத்தம் ஏற்படும். 


தெற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் நாமறிந்ததே. தென்றல் என்பது அதன் பெயர். தீண்டினால் உடலுக்கு இன்பம் பயக்கின்ற காற்று இஃதே.  மேற்கிலிருந்து வீசும் மேலைக் காற்றுக்குக் கோடை என்று பெயர். கோடைக்காற்று என்றதும் பொருள் விளங்குகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் மேற்கிலுள்ள நிலப்பகுதியிலிருந்து வெப்பமான காற்று வீசும். அது வெதுவெதுப்பாக இருப்பது. 


இந்நாற்றிசைக் காற்றுகளின் பண்பெனக் கொள்வது என்ன ? கொண்டல் ஈரம், தென்றல் இதம், வாடை குளிர், கோடை வெம்மை.  கோடைக் காற்றுத்தான் வெம்மை மிக்கது. வெப்பமூட்டுவது.  அந்தக் கோடைக் காற்றே வெப்பமூட்டாமல் இன்பமாகவும் இருந்தால் அதனை என்ன என்று சொல்லலாம் ? 


காற்றுக்குக் ‘கால்’ என்று இன்னொரு சொல் உண்டு. கால்+து என்பதுதான் காற்று. அந்தக் காற்று நல்ல காற்றாக இருந்தால் நல் காற்று = நற்காற்று. இன்னொரு வடிவில் சொல்வதால் நல் கால் = நற்கால். 

இல் வாய் வாயில் என்று சொற்கள் முன்பின்னாக மாறி இலக்கணப்போலி ஆகிறதா ? இல் முன்(று) முன்றில் என்று முன்பின்னாக மாறி இலக்கணப்போலி ஆகிறதா ? 


அவ்வாறே, நல்கால் => கால்நல் => ’கானல்’ என்னும் இலக்கணப்போலி ஆகிறது. (ல்ந = ன) 

மேற்கிலிருந்து வீசும் கோடைக்காற்று வழக்கமான வெம்மையாக இல்லாமல், இதமான நல்ல காற்றாக, நற்காலாக, கால்நல் - ஆக, கானலாக இருக்குமிடம் ‘கோடைக்கானல்.’ 


ஓர் ஊர்ப்பெயர்ச்சொல்லுக்கு இவ்வளவு அடிப்படைகள் இருக்கின்றன. ஆனால், நாம் என்ன செய்கிறோம் ? போகிறபோக்கில் கச்சாமுச்சா என்று எழுதிச் செல்கிறோம்"


கவிஞர் சொன்ன விளக்கம் எவ்வளவு சூப்பரா இருக்கு.. இனி திருத்திச் சொல்லிப் பழகுவோம்.. பல ஊர்ப் பெயர்களை இப்படித்தான் பலகாரம் போல மாற்றிப் போட்டு விட்டோம்.. ஒவ்வொன்றையும் திருத்திப் பார்க்க முயல்வோம்.. "திருந்துவது" நம்மவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்.. இருந்தாலும் முயற்சிப்போம்.. முடிந்ததால் எதுவும் இல்லையே!


கூகுள் குட்டப்பாவையும்   திருத்தணும்




அதேபோல நம்ம கூகுள் குட்டப்பாவையும்  கூடவே சேர்த்துத் திருத்தணும். அவர் கிட்டப் போய் கோடைக்கானல் அப்படின்னு search பண்ணா.. இல்லீங்கோ இல்லீங்கோ அது கொடைக்கானல் என்று Suggest செய்கிறார். அதிகம் பேர் பயன்படுத்தும் வார்த்தை கொடைக்கானல் என்பதால் இந்த விளைவு. அதிக அளவில் கோடைக்கானல் என்று நாம் தேட ஆரம்பித்தால், பயன்படுத்த ஆரம்பித்தால் கூகுளிலும் கூட நமது ஒரிஜினல் பெயருக்கு கோடைக்கானல் மாறக் கூடும்.


ஓகேய்... ராஜா சார், இப்ப நீங்க வரலாம்!


"லாலி லாலியே லாலி லாலியே…

அபிராமி லாலியே லாலி லாலியே…

அபிராமியே தாலாட்டும் சாமியே…

நான் தானே தெரியுமா…

உனக்கு புரியுமா…!"


நன்றி: கவிஞர் மகுடேசுவரன், வாலி சார், ராஜா சார் மற்றும் கமல் சார்!