ரயில் விபத்துக்கள் தொடர் கதையாகி விட்டன.. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின்

Su.tha Arivalagan
Oct 12, 2024,05:26 PM IST

சென்னை:   ரயில் விபத்துக்கள் நாடு முழுவதும் தொடர் கதையாகி வருகின்றன. இதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.


திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நேற்று இரவு நடந்த கோர விபத்தில் பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழப்பு ஏதும் இல்லை.




விபத்து நடந்த இடத்தில் தீவிர மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. தடம் புரண்ட 8 பெட்டிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. இன்னும் 3 பெட்டிகளை எடுக்க வேண்டியுள்ளது. அந்த பெட்டிகளை கிரேன்கள் மூலம் தூக்கி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கானோர் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த நிலையில் விபத்தில் காயமைடந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அமைச்சர் நாசர், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் மீட்புபுப் பணிகளுக்கு உதவி செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் அவர்கள் முகாமிட்டுள்ளனர். மாநில அரசு சார்பில் 22 ஆம்புலன்ஸ்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. உயிரிப்பு இல்லாதது மகிழ்ச்சி தருகிறது.


ஸ்டான்லி மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை, தீயணைப்புத்துறை, மீட்புப் படையினர், மாவட்ட நிர்வாகம், மருத்துவ குழுக்கள் விபத்து நடந்த இடத்தில் போதிய அளவில் உள்ளனர். முதல்வரும் மீட்புப் பணிகளை இதை கண்காணித்து மேற்பார்வையிட்டு வருகிறார்.


நாட்டில் ரயில் விபத்துக்கள் தொடர் கதையாகி வருகின்றன. இதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் உதயநிதி ஸ்டாலின்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்