காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் : 2 ராணுவ வீரர்கள் பலி

Aadmika
Sep 15, 2023,02:24 PM IST

ஸ்ரீநகர் : காஷ்மீரின் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் வீர மரணம் அடைந்துள்ளனர். பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து 48 மணி நேரமாக இந்த தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கடோல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள், பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவம் சந்தேகப்படுகிறது. தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 




இந்தியா ராணுவம், பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கடோலி வனப்பகுதியில் உள்ள இயற்கையான குகைகளுக்குள் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. குறைந்தது இரண்டு பேராவது அங்கு பதுங்கி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. நவீன ஆயுதுங்கள் மற்றும் கண்டறிய கருவிகளைக் கொண்டு ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 


தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் லக்ஷர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளின் பெயர் உள்ளிட்டவற்றையும் காஷ்மீர் போலீஸ் வெளியிட்டுள்ளது. 


பயங்கரவாதிகள் தாக்குதலால் ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவத்தால் காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் அனந்த்நாக் மாவட்ட பயங்கரவாத ஒழிப்பு பிரிவு போலீஸ் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி மக்கள் போராடி வருகின்றனர். அரசியல் கட்சிகள் பலவும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.