மொத்தம் 950 பேர்.. கரூரில் 54.. நாகப்பட்டனம் தொகுதியில் 9.. இதுதான் இறுதி வேட்பாளர் பட்டியல்!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இறுதியாக மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக கரூரில் 54 பேர் போட்டியிடுகின்றனர். குறைந்த அளவாக நாகப்பட்டனம் தனி தொகுதியில் 9 வேட்பாளர்கள் மட்டுமே உள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி லோக்சபா தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மாலை 3 மணியுடன் மனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்தது. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும் மொத்தம் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் 135 பேர் மனுக்களை திரும்பப் பெற்றனர். இதைத் தொடர்ந்து இறுதியாக தற்போது 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 874 பேர் ஆண் வேட்பாளர்கள், பெண்களின் எண்ணிக்கை 76 ஆகும்.
அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறைந்த அளவாக நாகப்பட்டனம் தனி தொகுதியில் 9 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் எட்டு பேர் ஆண்கள், ஒருவர் மட்டும் பெண் வேட்பாளர் ஆவார்.
சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக தென் சென்னையில் 41 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வட சென்னையில் 35 பேர் களத்தில் உள்ளனர். மத்திய சென்னையில் 31 பேர் நிற்கிறார்கள். கனிமொழி போட்டியிடும் தூத்துக்குடி தொகுதியில் 28 பேர் இறுதியாக களத்தில் உள்ளனர். கன்னியாகுமரி தொகுதியில் 22 பேர் போட்டிக் களத்தில் உள்ளனர்.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் 26 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இங்கும் ஏப்ரல் 19ம் தேதிதான் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலில் மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.