இப்ப பாஜகதான்.. பிரதான எதிர்க்கட்சி.. எப்படி பாயிண்ட்டைப் பிடிச்சார் பாருங்க நாராயணன் திருப்பதி!

Su.tha Arivalagan
Aug 19, 2024,01:34 PM IST

சென்னை:   மறைந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது திமுகதான் பிரதான எதிர்க்கட்சி. எனவே அப்போதைய அதிமுக அரசு, திமுகவை அழைத்தது. இப்போது பாஜகதான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி. எனவே பாஜகவை திமுக அரசு  அழைத்துள்ளது என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துள்ளார் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.


சமயம் கிடைக்கும்போதெல்லாம் பன்ச் வைத்து ஸ்கோர் செய்து கொள்கிறது பாஜக. முன்பு போல இல்லை. எல்லாவற்றிலுமே அதிரடிதான், அதிவேகம்தான். இதனால்தான் பிரதான எதிர்க்கட்சியாக சட்டசபையில் உள்ள அதிமுகவை பல நேரங்களில் பாஜக ஓவர்டேக் செய்து போய் விடுகிறது. அதிமுக ஒரு பிரச்சினை குறித்து கருத்து தெரிவிப்பதற்குள், அதுதொடர்பான போராட்டக் களத்திற்குப் போய் விடுகிறது பாஜக. இதுவும் கூட தமிழ்நாட்டில் பாஜகவின் தாக்கம் அதிகரிக்க ஒரு முக்கியக் காரணம்.


குறிப்பாக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி டிரென்டிங்கான விஷயங்களில் அதிரடியாக கருத்துக்களைத் தெரிவித்து கலகலக்க வைப்பார். அவரது ஒரு வரி பன்ச் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பிரபலமானது. இப்போதும் அதிமுகவை ஒரு வாரு வாரியுள்ளார்.




சென்னையில் நேற்று கலைஞர் நூற்றாண்டு விழாவில் அவரது நினைவு நாணயம் வெளியிடப்பட்டது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்திருந்தார்.


நாணயத்தில் இந்தி இருக்கிறது. திமுக - பாஜக இடையிலான ரகசிய உறவு வெளிப்பட்டு விட்டது என்றெல்லாம் அவர் விமர்சித்திருந்தார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பதிலடி கொடுத்திருந்தார். தற்போது நாராயணன் திருப்பதி தனது பாணியில் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் போட்ட எக்ஸ் தள பதிவில், எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் நாணயம் வெளியிட்ட போது நாங்கள் ஆட்சியில் இருந்தும், பாஜக வை அழைக்கவில்லை. ஆனால், கருணாநிதி நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழாவுக்கு பாஜக வை அழைத்தது ஏன்?" : எடப்பாடி பழனிசாமி. 


எம்ஜிஆர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவின் போது த‌மிழக‌த்தின் அன்றைய பிரதான எதிர்க் கட்சியான திமுக வை அழைத்தது அதிமுக.  கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவின் போது தமிழகத்தின் இன்றைய  பிரதான எதிர்க் கட்சியான பாஜகவை அழைத்தது திமுக. அவ்வளவுதான் என்று கூறியுள்ளார் நாராயணன் திருப்பதி.


இந்த கருத்தின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அவர் அடித்துள்ளார்.  திமுக - பாஜக இடையே ரகசிய உறவு உள்ளதாக கூறிய அதிமுகவின் கருத்துக்கு பதிலடி கொடுத்ததோடு, தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி பாஜகதான் என்று அடித்துச் சொல்லி அதிமுகவினருக்கும், கூடவே திமுகவினருக்கும் சேர்த்தே மெசேஜ் கொடுத்துள்ளார்.


கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி முறிந்து போய் விட்டது. பாஜகவை கூட்டணியிலிருந்து விலக்குவதாக அதிமுக தீர்மானம் போட்டது. அது முதல் பாஜக மற்றும் அதிமுக தலைவர்களுக்கு இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தற்போது மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவு நாணயம் தொடர்பாக அதிமுக - திமுக இடையே வெடித்துள்ள விமர்சனப் போரில் பாஜகவும் இடையில் புகுந்து அதிமுகவை விமர்சித்து வருகிறது.


இந்திய அரசு .. அது!




அதேபோல கலைஞர் நூற்றாண்டு நினைவு விழா சிறப்பாக நடந்தது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவைப் போட்டிருந்தார். அதில், இந்திய அரசு என்று குறிப்பிட்டிருந்தார். இதையும் நாராயணன் திருப்பதி ஸ்கிரீன்ஷாட் எடுத்து இந்திய அரசு என்று குறிப்பிட்டிருப்பதை ரவுண்டு கட்டி, அது என்று கருத்து வெளியிட்டுள்ளார்.


திமுக தலைவர்களும், திமுக கூட்டணியினரும் மத்திய அரசை ஒன்றிய அரசுதான் என்று கூறி வருகிறார்கள், எழுதிப் பேசியும் வருகிறார்கள். அதை பாஜக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் முதல்வரின் டிவீட்டில் தெரிந்த இந்த மாற்றத்தை சுட்டிக் காட்டி அது என்று பதிவிட்டுள்ளார் நாராயணன் திருப்பதி.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்