லதா மல்லிகார்ஜூன்... பாஜகவை வீழ்த்திய சுயேச்சை.. காங்கிரஸுக்கு நிபந்தனையில்லாத ஆதரவு!
May 15, 2023,11:34 AM IST
பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹரப்பனஹள்ளி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு பாஜக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்ற லதா மல்லிகார்ஜூன், காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் கர்நாடக துணை முதல்வர் எம்.பி. பிரகாஷின் மகள்தான் லதா மல்லிகார்ஜூன். காங்கிரஸ் பாரம்பரியத்தைப் பின்னணியாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தத் தேர்தலில் இவர் சுயேச்சையாக ஹரப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட்டார். இத்தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்ட கருணாகர ரெட்டியை 13,845 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளரான அகில இந்திய பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலாவை நேரில் சந்தித்த அவர் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து சுர்ஜிவாலா கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்கு லதா மல்லிகார்ஜூன் நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துள்ளார். அவர் கொள்கை ரீதியாக காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்தைக் கொண்டவர். அவருக்கும், அவரது கணவர் மல்லிகார்ஜூனுக்கும், நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தனை பேரும் சேர்ந்து 6.5 கோடி கன்னடர்களின் நலனுக்காக உழைப்போம் என்றார் சுர்ஜிவாலா.