லஞ்ச வழக்கில்.. ஜாமீனில் விடுதலையாகி கொண்டாடித் தீர்த்த பாஜக எம்எல்ஏ.. மீண்டும் கைது!

Su.tha Arivalagan
Mar 28, 2023,12:55 PM IST
பெங்களூரு: கர்நாடக மாநிலம் சென்னகிரி பாஜக எம்எல்ஏ மடல் விருப்பாக்ஷப்பா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்ச வழக்கில் ஏற்கனவே கைதாகி அவர் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார். அந்த ஜாமீனை கோர்ட் ரத்து செய்ததைத் தொடர்ந்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாவணகரேவைச் சேர்ந்தவர் மடல் விருப்பாக்ஷப்பா.. இவரது மகன் பிரஷாந்த் மடல். இவர் கர்நாடக நிர்வாக அதிகாரியாக இருக்கிறார்.  பெங்களூரு குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தில் அதிகாரியாக இருந்து வருகிறார்.



கடந்த மாதம் பிரஷாந்த் மடல், ரூ. 40 லட்சம் லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாக லோக்ஆயுக்தா போலீஸாரிடம் சிக்கினார். இந்த வழக்கில் மடல் விருப்பாக்ஷப்பாவும் சேர்க்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு தாவணகரே கோர்ட் ஜாமீன் அளித்தது. இதையடுத்து வெளியில் வந்த அவருக்கு அவரது ஆதரவாளர்கள் மிகப் பெரிய வரவேற்பு அளித்து கொண்டாடியபடி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இது மக்களிடையே பெரும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. பாஜகவுக்கும் இது சங்கடத்தைக் கொடுத்தது.

இந்த நிலையில் இவருக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஹைகோர்ட் நேரில் வருமாறு இவருக்கு சம்மன் அனுப்பியது. நேரில் வந்து அவரும் விளக்கம் அளித்தார். இதன் இறுதியில் அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. 

இதையடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்படும் சூழல் உருவானது. ஆனால் கைது நடவடிக்கையிலிருந்து தப்ப அவர் தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னகிரியிலிருந்து தாணவகரே செல்வதற்காக காரில் போய்க் கொண்டிருந்த அவரை தும்கூரு சாலையில் உள்ள கைத்தசந்திரா டோல் பூத்தில் வைத்து போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

அவரை கர்நாடக சோப்பு நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது நடந்த ஊழல் தொடர்பாக போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு மூலப் பொருட்களை சப்ளை செய்வது தொடர்பாகத்தான் அந்த ரூ. 40 லட்சம் லஞ்சப் பணத்தை தனது மகன் மூலம் வாங்கியிருந்தார் விருப்பாக்ஷப்பா என்பது போலீஸாரின் குற்றச்சாட்டாகும்.