ரூ. 500க்கு லாட்டரி.. ரூ. 25 கோடி அள்ளிய மெக்கானிக்.. அந்த வெல்டிங் கடைக்காரருக்கு ஆயிரம் தேங்க்ஸ்!

Su.tha Arivalagan
Oct 12, 2024,05:26 PM IST

மாண்டியா:   கேரள மாநில லாட்டரிச் சீட்டை ரூ. 500க்கு வாங்கிய கர்நாடக மெக்கானிக்குக்கு ரூ. 25 கோடி பரிசு கிடைத்துள்ளது அந்த மாநிலத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எல்லாத்துக்கும் காரணம் என்னோட மனைவி தாங்க என்று பெருமை + அடக்கத்துடன் கூறுகிறார் மாண்டியாவைச் சேர்ந்த மெக்கானிக்.


கேரளாவில் இன்னும் லாட்டரிச் சீட்டுக்கள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. அங்கு லாட்டரிச் சீட்டு வாங்காத வீடுகளே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு லாட்டரிச் சீட்டு அமோகமாக உள்ளது. தமிழ்நாட்டிலும் கூட ஒரு காலத்தில் லாட்டரிச் சீட்டுக்கள் இருந்தன. பின்னர் அவற்றால் மக்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருவதால் அதை தடை செய்து விட்டது அரசு. ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் கேரள லாட்டரிச் சீட்டுக்களை வாங்கும் வழக்கத்தை வைத்துள்ளனர். ஆனால் யாருக்கும் இதுவரை பெரிய அளவில் பிரைஸ் கிடைத்ததாக தெரியவில்லை.




இந்த நிலையில் கேரள லாட்டரிச் சீட்டை வாங்கிய கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த ஒரு மெக்கானிக்குக்கு ரூ. 25 கோடி பரிசு கிடைத்திருப்பது கர்நாடகவை மட்டுமல்லாமல் கேரளாவையும் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


இந்த அதிர்ஷ்டக்காரரின் பெயர் அல்தாப் பாஷா. 45 வயதான இவர் கேரள மாநில அரசு நடத்திய ரூ. 25 கோடி முதல் பரிசுக்கான திருவோணம் பம்பர் லாட்டரிச் சீட்டை வாங்கியிருந்தார். அந்தப் பரிசுதான் இப்போது அல்தாபுக்குக் கிடைத்துள்ளது. மாண்டியாவைச் சேர்ந்த அல்தாப், சென்னை பாண்டவபுரா - மாண்டியா சாலையில்  ஒரு சிறிய பைக் மெக்கானிக் ஷாப் வைத்துள்ளார். மனைவி சீமாவுடன் பசவனங்குடி லேஅவுட் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.


இந்தத் தம்பதிக்கு 21 வயதில் மகனும், 19 வயதில் மகளும் உள்ளனர். சமீபத்தில் வயநாடு சென்றிருந்தார் அல்தாப். அங்கு வைத்து 500 ரூபாய்க்கு லாட்டரிச் சீட்டு வாங்கியுள்ளார். ஊருக்குத் திரும்பி வந்த அவருக்கு பணமுடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது பக்கத்து கடைக்காரரான வெல்டிங் கடை வைத்துள்ள நண்பரிடம் இந்த சீட்டை வாங்கிக் கொண்டு கொஞ்சம் பணம் கொடு என்று கேட்டுள்ளார். ஆனால் வெல்டிங் கடைக்காரர் வாங்க மறுத்து விட்டாராம். அட போப்பா இதை வாங்கிட்டு நான் என்ன பண்றது.. இதெல்லாம் பரிசு கிடைக்காது என்று கூறி விட்டாராம்.


இதனால் அப்செட்டாகி விட்டாராம் அல்தாப். அவரது மகன், வீட்டில் நிலவிய வறுமை காரணமாக பள்ளிப் படிப்போடு நிறுத்தி விட்டு தனது தந்தையுடன் மெக்கானிக்காக இருந்து வருகிறார். இந்த நிலையில்தான் அல்தாப்புக்கு அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்துள்ளது. அவர் வாங்கிய லாட்டரிச் சீட்டுக்கு முதல் பரிசு கிடைத்த தகவல் கிடைத்ததும் அல்தாப்  இன்ப அதிர்ச்சிக்குள்ளானார். மகனையும் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்து மனைவியிடம் கூறியுள்ளார். அவரால் நம்பவே முடியவில்லையாம். என்னங்க சொல்றீங்க என்று வியப்புடன் கேட்டுள்ளார். உண்மை என்று தெரிய வந்ததும் ஆனந்தக் கண்ணீர் விட்டாராம்.


தனக்கு கிடைத்துள்ள பரிசு குறித்து அல்தாப் கூறுகையில், எனது குடும்பக் கஷ்டமெல்லாம் தீரப் போகிறது. எனக்கு வரி உள்ளிட்ட பிடித்தங்கள் எல்லாம் போக ரூ. 12.8 கோடி கிடைக்குமாம். அதை வைத்துத முதலில் வீடு வாங்கப் போகிறேன். பிறகு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணப் போறேன். எனது மகளையும் நல்லபடியாக கல்யாணம் செய்து கொடுத்து விட முடியும். என்னைப் போல கஷ்டப்படுகிறவர்களுக்கும் உதவப் போகிறேன் என்று கூறியுள்ளார் அல்தாப்.


அல்தாப் முதலில் நன்றி சொல்ல வேண்டியது.. அந்த வெல்டிங் கடைக்காரருக்குத்தான்.. என்ன சொல்றீங்க!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்