ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை.. கர்நாடகா அரசு திட்டம்.. ஐடி ஊழியர்கள் யூனியன் கடும் கண்டனம்!
பெங்களூரு: கர்நாடக அரசு கொண்டு வரவுள்ள ஒரு திட்டத்திற்கு அந்த மாநில ஐடி ஊழியர்கள் யூனியன் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் பிபிஓ பிரிவு ஊழியர்களின் வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 14 மணி நேரம் என மாற்ற கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக மாநில கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டம் 1961ல் திருத்தம் கொண்டு வர கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திருத்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக ஐடி ஊழியர்கள் யூனியன் கூறுகையில், கர்நாடக அரசின் திட்டத்தின்படி ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்யும் நிலைக்கு ஊழியர்கள் தள்ளப்படுவர். தற்போதைய சட்டப்படி அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஒவர்டைம் உள்பட 10 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க முடியும். இதை மேலும் 4 மணி நேரமாக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது அதிர்ச்சி தருகிறது. மேலும் புதிய சட்டத் திருத்தத்தில் ஓவர்டைமையும் எடுத்து விட்டனர். இது காலவரையற்ற வகையில் ஊழியர்களை வேலை பார்க்க வைக்கும் நிலைக்கு கொண்டு சென்று விடும். இது மனிதாபிமானமற்ற முடிவு. இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் கடுமையா வேலைப்பளுவில் சிக்கித் தவிக்கின்றனர். தற்போதைய சட்டத் திருத்தம் நிலைமையை மேலும் மோசமாக்கவே வழி வகுக்கும். அதிகரிக்கும் வேலை நேரம் காரணமாக பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனமும், சர்வதேச தொழிலாளர் கழகமும் ஏற்கனவே எச்சரித்துள்ளன. ஆனால் இவற்றையெல்லாம் முழுமையாக புறம் தள்ளி விட்டு, தனி மனித அடிப்படை உரிமைகளையும் கணக்கில் கொள்ளாமல் கர்நாடக அரசு இந்த முடிவை எடுத்திருப்பது மனிதநேயமற்ற செயலாகும் என்று அது கூறியுள்ளது.
இப்படித்தான் கடந்த ஆண்டு, இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி, ஐடி ஊழியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று யோசனை தெரிவித்து பெரும் கண்டனத்துக்குள்ளானார். தற்போது கர்நாடக அரசு கிட்டத்தட்ட அதே அளவிலான வேலை நேரத் திட்டத்தைக் கொண்டு வந்து சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.