ஒரே வருஷம்தான்.. காங்கிரஸிலிருந்து தாவி.. மீண்டும் பாஜகவுக்கே வந்த ஜெகதீஷ் ஷெட்டர்!

Su.tha Arivalagan
Jan 25, 2024,05:16 PM IST

டெல்லி: கடந்த வருடம் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸுக்குத் தாவிய முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், இந்த வருடம்  காங்கிரஸலிருந்து தாவி மீண்டும் பாஜகவுக்கே வந்து விட்டார்.


சட் சட்டென்று அணிகளுக்கும், கட்சிகளுக்கும் தாவுவது அரசியலில் ஒரு கலையாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்தக் கட்சியிலிருந்து அந்தக் கட்சிக்கும், அந்தக் கட்சியிலிருந்து இந்தக் கட்சிக்கும் தலைவர்கள் தாவுவது சகஜமான ஒன்று.


கடந்த வருடம் இப்படித்தான், கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு, தனக்கு சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பாஜகவை விட்டு விலகி காங்கிரஸுக்கு தாவி வந்தார். காங்கிரஸுக்கு வந்த அவர்  ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டார். 




ஆனால்  தேர்தலில் அவர் படு தோல்வியைச் சந்தித்தார். அத்தொகுதியில் பாஜக வேட்பாளர் மகேஷ் தெங்கினக்காய், 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியைப் பெற்றார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஷெட்டர், பண பலமும், மிரட்டலும் வென்று விட்டதாக  கூறியிருந்தார்.


இந்த நிலையில் இன்று திடீரென காங்கிரஸை விட்டு விலகி, பாஜகவுக்கே வந்து விட்டார் ஷெட்டர். தான் காங்கிரஸ் கட்சியில் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டதாக கூறியுள்ளார் ஷெட்டர். உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களை டெல்லியில் சந்தித்துப் பேசிய பின்னர் அவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.


68 வயதான ஷெட்டர் லிங்காயத்து வகுப்பைச் சேர்ந்தவர். தான் மீண்டும் பாஜகவில் சேர்ந்துள்ளது குறித்து அவர் கூறுகையில்,  கடந்த காலத்தில் பாஜக எனக்கு பல பொறுப்புகளைக் கொடுத்தது. சில பிரச்சினைகளால் நான் காங்கிரஸில் சேர்ந்தேன். கடந்த 8,9 மாசமாக என்னை மீண்டும் பாஜகவில் வந்து சேருமாறு நண்பர்கள் பலர் அழைத்து வந்தனர். அதை ஏற்று வந்துள்ளேன்.  எதியூரப்பா, விஜயேந்திரா ஆகியோரும் அழைத்தனர். பிரதமராக மீண்டும் நரேந்திர மோடியே தேர்ந்தெடுக்கப்படுவார். இது உறுதி என்றார் ஷெட்டர்.


டெல்லி பாஜக தலைமையலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஷெட்டர் கட்சியில் சேர்ந்த நிகழ்வில் முன்னாள் கர்நாடக முதல்வர் எதியூரப்பா, அவரது மகனும், கர்நாடக பாஜக தலைவருமான விஜயேந்திரா ஆகியோரும் உடன் இருந்தனர்.