கர்நாடகாவிலும் அதிமுக பஞ்சாயத்து.. ஓபிஎஸ்.,ஐ விடாமல் துரத்தும் எடப்பாடி!

Aadmika
Apr 23, 2023,12:45 PM IST
பெங்களூரு : அதிமுக கட்சி விவகாரம் தமிழக அரசியலை தாண்டி கர்நாடக அரசியலிலும் பரபரப்பை கிளப்பி வருகிறது. தமிழகத்தில் மட்டுமில்லாது கர்நாடகாவிலும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்சி தலைமை களம் இறங்கி உள்ளது.

தமிழகத்தில் அதிமுக தலைமை யாருக்கு, இரட்டை இலை சின்னம் யாருக்கு என ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்புகள் இடையே பல மாதங்களாக கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. இதற்காக சுப்ரீம் கோர்ட் வரை சென்று அடுத்தடுத்து மனுத்தாக்கல் செய்து வந்தார் ஓபிஎஸ். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படலாம் என கோர்ட் உத்தரவு அளித்த பிறகும், அதை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்தார். இப்படி கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இதற்கிடையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஈபிஎஸ் அணி நிறுத்திய வேட்பாளருக்கு எதிராக, ஓபிஎஸ்.,ம் வேட்பாளரை அறிவித்து, அவர் மனுத் தாக்கலும் செய்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் பாஜக தலையிட்டு, ஓபிஎஸ் தரப்பிடம் பேசி பின்வாங்க வைத்தது. இதில் அதிமுக வேட்பாளராக ஈபிஎஸ் தரப்பு வேட்பாளரே போட்டியிட்டார். இருந்தும் அதிமுக விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பாகவே பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மே 10 ம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட ஓபிஎஸ், வேட்பாளரை அறிவித்தார். இவரது வேட்புமனு அதிமுக வேட்பாளர் என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஓபிஎஸ் தரப்பு பிரச்சார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சமயத்தில், கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக தலைமை சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.




அதிமுக பெயரை ஓபிஎஸ் அணி வேட்பாளர் வேட்பாளர் பயன்படுத்த முடியாது. அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் தமிழக அரசியலை தாண்டி கர்நாடக அரசியலிலும் அதிமுக விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிமுக தலைமையில் புகாரால் அதிமுக சார்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் மனு நிராகரிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழகத்தில் நடந்த தேர்தலில் தான் ஓபிஎஸ் தரப்பால் போட்டியிட்டு தங்களின் பலத்தை நிரூபிக்க முடியவில்லை என்றால், கர்நாடகாவில் நடக்கும் தேர்தலில் கூட போட்டியிட முடியாமல் பிரச்சனை துரத்திக் கொண்டிருக்கிறது.