கர்நாடகத்தின் பிரவீன் சூத்.. அடுத்த சிபிஐ இயக்குநர் இவர்தான்.. 2 ஆண்டுகள் பதவி வகிப்பார்!

Su.tha Arivalagan
May 15, 2023,09:25 AM IST
டெல்லி: சிபிஐ இயக்குநராக கர்நாடக டிஜிபி பிரவீன் சூத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2 ஆண்டுகள் இந்த பொறுப்பை வகிப்பார்.

சிபிஐ இயக்குநராக தற்போது சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் மே மாதம் 25ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய சிபிஐ இயக்குநராக பிரவீன் சூத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது கர்நாடக டிஜிபியாக இருக்கிறார். இவரைத்தான் சிபிஐ இயக்குநராக மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.



பிரவீன் சூத் மீது கர்நாடக காங்கிரஸ் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறி வந்தது. கர்நாடக பாஜக அரசுக்கு சாதகமாக இவர் நடந்து கொள்கிறார். பல்வேறு பிரச்சினைகளிலிருந்து பாஜக அரசை இவர் காப்பாற்றி வருகிறார். தவறுகளுக்குத் துணை போகிறார். காங்கிரஸார் மீது வேண்டும் என்றே பொய் வழக்குகளைப் போடுகிறார். இவரைக் கைது செய்ய வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பகிரங்கமாகவே குற்றம் சாட்டி வந்தார். இந்த நிலையில் தற்போது கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரவீன் சூத் டெல்லிக்கு இடம் பெயரப் போகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழு, புதிய சிபிஐ இயக்குநர் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தியது. அதில் பிரவீன் சூத் பெயர் இறுதி செய்யப்பட்டது.

நாட்டின் 2வது மூத்த ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கிறார் பிரவீன் சூத். 1986ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான இவர் 2 ஆண்டுகளுக்கு சிபிஐ இயக்குநராக பதவி வகிப்பார். ஆனால் மத்தியஅரசு நினைத்தால் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.