சிலிண்டருக்கு பூஜை: மோடி சொன்னதை செய்து காட்டிய டிகே சிவக்குமார்.. ஏன் தெரியுமா?

sahana
May 10, 2023,11:05 AM IST
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கேஸ் சிலிண்டருக்கு பூஜை செய்த புகைப்படம், வீடியோ வெளியான நிலையில், அதற்கான காரணமும், அதன் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடியும் இருப்பது தெரியவந்துள்ளது.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும் இன்று (மே 10) ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய மூன்று கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. 

பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க மூன்று கட்சிகளும் முனைப்பு காட்டி வரும் நிலையில், பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமியை தங்கள் பக்கம் இழுத்து முதல்வர் பதவியும் அளித்து, ஆட்சியில் பங்கெடுக்க பா.ஜ.க.,வும் காங்கிரசும் திட்டமிட்டுள்ளன.



கமுக்கமாக இருந்த குமாரசாமி

இதனால் தேர்தல் பிரசாரத்திலும் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் மாறிமாறி குற்றச்சாட்டை முன்வைத்தாலும், குமாரசாமியின் கட்சியை பெரிதளவில் இரு கட்சிகளும் விமர்சிக்கவில்லை. பிரசாரம் நேற்று முன்தினம் (மே 8) மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், முக்கிய தலைவர்கள் சிலர் கோயில்களுக்கு சென்று வெற்றி பெற சிறப்பு பிரார்த்தனை செய்தனர். 

அந்த வகையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் பெங்களூருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் சென்று தரிசனம் செய்தனர். இந்த தேர்தலில், ஹனுமன் கோயில் அரசியலை கையில் எடுத்திருக்கும் காங்கிரஸ், இவ்வாறு வழிபாடு நடத்தியதும் ஒருவித அரசியல் சாதூர்யம்தான் என்கின்றனர் சிலர். 

இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், நேற்று கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, பூ, வாழைப்பழம், தேங்காய் வைத்து, சூடம் ஏற்றி தீபாரதணையுடன் பூஜை செய்து வழிபட்டார். இதன் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கேஸ் விலையேற்றத்தை மனதில் வைத்து மக்கள் பா.ஜ.,வுக்கு எதிராக ஓட்டளிக்குமாறு சிவ���்குமார் மறைமுகமாக உணர்த்தவே இந்த பூஜை போன்ற ‘செட்அப்’ செய்ததாக கூறப்படுகிறது.

அன்று மோடி சொன்னது..!

ஆனால் அதற்கு காரணமே வேறு... மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது கேஸ் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதைய பாஜக பெரும் போராட்டம் செய்தது. அது 2014ல் நடந்த மக்களவை தேர்தலிலும் எதிரொலித்தது. 2013ல் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘நீங்கள் ஓட்டளிக்கச் செல்லும்போது, வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டருக்கு நமஸ்காரம் செய்யுங்கள், அதையும் பிடுங்கி விடுவார்கள்’’ என பதிவிட்டிருந்தார்.



அதாவது, கேஸ் சிலிண்டர் விலை ஏறிக்கொண்டே இருக்கும் நிலையில், காங்கிரசுக்கு மறுபடியும் ஓட்டளித்தால் கேஸ் வாங்க முடியாத அளவிற்கு விலையேற்றம் இருக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதை குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டிருந்தார். ஆனால், 2014, 2019ம் ஆண்டுகளில் நடந்த மக்களை தேர்தல்களில் பாஜக வெற்றிப்பெற்றும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட கூடுதல் விலைக்கு கேஸ் சிலிண்டர் விற்கப்படுகிறது.

இதனை வெளிப்படுத்தவே, அன்று மோடி நக்கலாகவும் காங்கிரசை விமர்சித்தும் கேஸ் சிலிண்டர் குறித்து போட்டிருந்த பதிவுக்கு தற்போது டி.கே.சிவக்குமார் பூஜையே செய்து காட்டியுள்ளார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.