"பையுடன் வந்த மர்ம நபர்".. ராமேஸ்வரம் கபேயில் வெடித்தது குண்டுதான்.. முதல்வர் சித்தராமையா தகவல்
பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் 2 முறை வெடிகுண்டு வெடித்தது தெரிய வந்துள்ளது. வெடித்தது குண்டுதான் என்பதையும் முதல்வர் சித்தராமையா உறுதிப்படுத்தியுள்ளார்.
பெங்களூரு இந்திரா நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது ராமேஸ்வரம் கபே எனப்படும் சைவ ஹோட்டல். மிகவும் பிரபலமான இந்த ஹோட்டலில் இன்று திடீரென மர்மப் பொருள் வெடித்தது. சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. தற்போது இங்கு நடந்தது வெடிகுண்டு வெடிப்பு என்று தெரிய வந்துள்ளது.
"பையில் கொண்டு வரப்பட்டு வெடிகுண்டு"
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் வெடித்தது குண்டுதான் என்று தெரிய வந்துள்ளது. குறைந்த சக்தி கொண்ட ஐஇடி வெடிகுண்டு என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். ஒரு மர்ம நபர் பையை கொண்டு வைத்து விட்டுப் போனது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார் சித்தராமையா.
இதில் அரசியல் இருக்கிறதா என்ற கேள்விக்கு சித்தராமையா பதிலளிக்கையில், அப்படியெல்லாம் கிடையாது. யார் வைத்தது என்று தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது. உள்துறை அமைச்சரை அங்கு அனுப்பியுள்ளேன். கடந்த பாஜக ஆட்சியில் மங்களூரில் வெடிகுண்டு வெடித்தது. இப்போது இங்கு வெடித்துள்ளது என்றார் சித்தராமையா.
குண்டுவெடிப்பில் 9 பேர் காயம்
இந்த குண்டுவெடிப்பில் 9 பேர் வரை காயமடைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. 2 குண்டுகள் வெடித்துள்ளன. அடுத்தடுத்து இந்த குண்டுகள் வெடித்துள்ளன. குண்டுகள் வெடித்ததும் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். சிலர் காயமடைந்து கீழே விழுந்து கிடந்தனர்.
ஒரு மர்ம நபர் பெரிய பையை அங்கு கொண்டு வைத்து விட்டுச் செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த நபரைப் பிடிக்க தற்போது விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அவர் வந்த பாதைகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆள் சிசிடிவியில் சிக்கி விட்டதால் விரைவில் பிடிபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காயமடைந்த யாரும் அபாய கட்டத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டுச் சிதறல்கள் பட்டுக் காயமடைந்தோர்தான் அதிகம் என்பதால் வேறு அபாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு விரைவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் வரவுள்ளனர்.