ராகுல் காந்திக்கு எதிராக.. காங்கிரஸ் கட்சிக்குள் சதி.. சொல்கிறார் பாஜக எம்பி!

Su.tha Arivalagan
Mar 31, 2023,11:15 AM IST
பெங்களூரு: ராகுல் காந்திக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்குள் சதி நடந்து வருவதாக கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. லஹர் சிங் சிரோயா கூறியஉள்ளார்.

ராகுல் காந்தியை பலவீனமாக்கவும், அவரை ஏமாற்றி தவறான திசைக்குத் திருப்பும் முயற்சிகள் நடப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.  ராகுல்காந்தியின் ஆலோசகர்கள் உண்மையில் அவருக்கு நல்ல ஆலோசனைகள் தருவதில்லை. மாறாக, அவருக்கு எதிராகவே அவர்கள் செயல்படுகிறார்கள். ஆனால் இதை ராகுல் காந்தி உணராமல் இருப்பதாகவும் சிரோயா கூறியுள்ளார்.



இதுகுறித்து சிரோயா கூறுகையில், ராகுல் காந்திக்கு எதிராக பழிவாங்கும் உணர்வுடன் பாஜக செயல்படவில்லை. உண்மையில் ராகுல் காந்திக்கு எதிராக இருப்பது காங்கிரஸ் கட்சிதான். அவரது ஆலோசகர்கள்தான் அவருக்கு தவறான வழிகாட்டலை கொடுத்து வருகின்றனர்.  ராகுல் காந்தி நல்லவர்தான். ஆனால் அவரைச் சுற்றி இருப்பவர்கள் தவறான பாதையில் அவரை அழைத்துச் செல்கின்றனர்.

நாங்கள் ராகுல் காந்திக்கு எதிராக ஆக்ரோஷமாக இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். அது உண்மை இல்லை. அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. அவர் மீண்டும் எம்.பியாகி நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும், விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்றுதான் நாங்கள் ஆசைப்படுகிறோம்.

இந்திரா காந்தி முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது உடனடியாக அதை எதிர்த்து அவர் அலகாபாத் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தார்.  கோர்ட்டும் அவரது தகுதி நீக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. பின்னர் சுப்ரீம் கோர்ட் வரை சென்றார் இந்திரா காந்தி. அவர் தொடர்ந்து எம்.பியாக இருந்தார். பின்னர் பிரதமரும் ஆனார். 

ஆனால் ராகுல்காந்தி அப்பீல் செய்வது குறித்து தவறாக வழி நடத்தப்படுகிறார். காங்கிரஸுக்குள் பல குழப்பங்கள் உள்ளன. அதைசயெல்லாம் சரி செய்ய காங்கிரஸ் முயலாமல் உள்ளது என்றார் அவர்.