கர்நாடக வெற்றி: "அன்பு வென்றது.. வெறுப்பு விரட்டப்பட்டது".. ராகுல் காந்தி அதிரடி!

Su.tha Arivalagan
May 13, 2023,03:45 PM IST
டெல்லி: கர்நாடக சட்டசபைத் தேர்தல் வெற்றி தொடர்பாக காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அன்பு வென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், வெறுப்புகளின் சந்தை மூடப்பட்டு விட்டது. அன்பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.  அன்பு வென்றுள்ளது. மக்களின் சக்தி வென்றுள்ளது.  இது பிற மாநிலங்களுக்கும் பரவும்.



மக்கள் பிரச்சினைக்காக காங்கிரஸ் போராடியது. ஏழைகளுக்காக போராடியது. கர்நாடகத்தில் அமையும் காங்கிரஸ் அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் நாங்கள் வாக்களித்த வாக்குறுதிகளில் ஐந்து முதலில் நிறைவேற்றப்படும் என்றார் ராகுல் காந்தி.

பாரத் ஜோதா யாத்திரை மூலம் கர்நாடகத்தில் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருந்தார் ராகுல் காந்தி. மேலும் பிரச்சாரத்தின்போதும் கூட அவர் எளிமையானதாக அதை மாற்றியிருந்தார். ஆடம்பரமாக எதையும் செய்யவில்லை. சாதாரண மனிதராக அவர் வலம் வந்தார். டூவீலரில் ஜாலியாக போனார். மக்களோடு மக்களாக அமர்ந்து பேசினார். பஸ்களில் பயணித்தார்.

எளிய முறையில் வலம் வந்த ராகுல் காந்தி மீது மக்களுக்கும் ஒரு விதமான பாசஉணர்வு சூழ்ந்திருந்தது. அவரது எம்பி பதவிபறிப்பு அவர் மீதான அனுதாபத்தைக் கூட்டியிருந்ததும் கூடுதல் காரணமாகும். மொத்தத்தில் காங்கிரஸ் கட்சி, எல்லாவற்றுக்கும் சேர்த்து கர்நாடகத்தில் வச்சுசெய்து விட்டது என்றே சொல்லலாம்.