25 ஆவது கார்கில் போர் வெற்றி தினம்.. 25 பெண்களின் பைக் சாகச பயணம்.. லே முதல் லடாக் வரை!

Manjula Devi
Jul 25, 2024,11:02 AM IST

லடாக்: கார்கில் போர் வெற்றியின் 25வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு படையில் உள்ள 25 பெண்கள் லே முதல் கார்கில் வரை பைக் சாகச பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.


கடந்த 1999-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள கார்கிலில்  பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்தது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே போர் மூண்டது. அந்த சமயத்தில் இந்தியாவில் பிரதமராக இருந்தவர் வாஜ்பாய். பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப். பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்தவர் முஷாரப். பின்னர் இவர் பாகிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றி சர்வாதிகாரியாக மாறினார் என்பது நினைவிருக்கலாம்.




கார்கில் போரில்  பாகிஸ்தான் பெரும் நஷ்டத்தையும், பாதிப்பையும் சந்தித்தது. அந்த நாட்டு வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்தியத் தரப்பில் 543 பேர் வீர மரணம் அடைந்தனர். இறுதியில் இந்த போரில்  இந்தியா ராணுவம் வெற்றி பெற்று, பாகிஸ்தான் ராணுவத்திற்கு பாடம் புகட்டியது. பாகிஸ்தானின் இந்த செயலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த கார்கில் போர் வெற்றி தினம் ஒவ்வொரு வருடமும் ஜூலை 26 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவத்தினரை நினைவு கொள்ளும் வகையில் கார்கில் நினைவிடத்தில் விழா நடைபெறுவது வழக்கம்.


அந்த வகையில் இந்த வருடம் கார்கில் போரின் 25-ஆவது வருட வெற்றி தினம் ஜூலை 26 அதாவது நாளை கொண்டாடப்பட உள்ளது. கார்கில் நினைவிடத்தில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருக்கிறார். இதற்காக ராணுவத்தினர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து, ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் கார்கில் போர் வெற்றியின் 25வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு படையில் உள்ள பெண்கள் 25 பேர் லே முதல் கார்கில் வரை பைக் சாகச பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து லடாக் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவுச் சின்னங்களில் அஞ்சலி செலுத்தவும் உள்ளனர்.