கார்கில் போரில் வென்ற தினம்.. லடாக் நினைவிடத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம்.. நாடு முழுவதும் அஞ்சலி

Manjula Devi
Jul 26, 2024,05:14 PM IST

லடாக்:   கார்கில் வெற்றி தினத்தின் 25 வது வருட தினத்தை முன்னிட்டு, இன்று பிரதமர் நரேந்திர மோடி லடாக் சென்று, கார்கில் போர் நினைவிடத்தில் போரில் உயிர் துறந்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செய்து அஞ்சலி செலுத்தினார்.


கடந்த 1999 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் அத்துமீறி நுழைந்தது. இதையடுத்து இந்திய ராணுவத்திற்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே போர் மூண்டது. இந்தப் போரின் இறுதியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த  வெற்றி தினத்தை கார்கில் வெற்றி தினமாக ஒவ்வொரு வருடமும் ஜூலை 26 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் வகையில் அஞ்சலி  செலுத்தப்பட்டு, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம்.


இந்த வருடம் கார்கில் வெற்றி தினம் 25 வது வருடம் ஆகும். இந்த 25 ஆவது கார்கில் வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு கார்கில் போரில் உயிர் துறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 




பிரதமர் நரேந்திர மோடி இன்று 25வது கார்கில் வெற்றி தினத்தை கொண்டாடுவதற்காக கார்கில் சென்றார். அப்போது கார்கில் போரில் உயிர்த் துறந்த வீரர்களின் நினைவிடத்தில் வீரர்களுக்கு வீரவணக்கம் செய்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


தேசமே முதன்மை - பிரதமர் மோடி


கார்கில் போர் வெற்றி தின விழாவில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது கூறியதாவது:  தியாகம் என்பது மரணமே இல்லாதது என்பது கார்கில் வெற்றி நமக்கு உணர்த்துகிறது. உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நம் தேசம் மிகவும் கடன் பட்டுள்ளது. நம் தேச அன்னைக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை நான் தலை வணங்குகிறேன்.


தேசமே முதன்மை என்ற உணர்வுக்கு வணக்கம் செலுத்துகிறேன். தீவிரவாதத்தை நமது வீரர்கள் முழுவதுமாக எதிர்ப்பார்கள்‌. லடாக் , காஷ்மீர் வளர்ச்சிக்கு எதிரான பிரச்சினைகளை இந்தியா தோற்கடிக்கும்.370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.ஜம்மு, காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா துறை மேம்பட்டு வருகிறது‌. ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டம் லடாக்கின் வளர்ச்சியை மேம்படுத்தும்.


கடந்த 5 ஆண்டுகளில் லடாக்கின் பட்ஜெட்டை 6,000 கோடி ரூபாயாக உயர்த்தி உள்ளோம்.லடாக் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக மத்திய அரசு தொடர்ந்து உழைத்து வருகிறது.லடாக் இளைஞர்களுக்கு தரமான உயர்கல்வி கிடைக்க சிந்து பல்கலை அமைக்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.


பாதுகாப்பு படை பெண்  வீரர்கள் அஞ்சலி: 


முன்னதாக கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு நேற்று பாதுகாப்பு படையில் உள்ள 25 பெண்கள் லே முதல் கார்கில் வரை பைக் சாகசத்தை  மேற்கொண்டு வந்தனர். அதன் நிறைவாக இன்று  கார்கில் நினைவிடத்தில் அஞ்லியும் செலுத்தினர்.


கார்கில் தினம் குறித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  கார்கில் வெற்றி தினம் நமது ஆயுதப் படைகளின் அசாத்தியமான துணிச்சலுக்கும், அசாதாரண வீரத்துக்கும் நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்தும் ஒரு சந்தர்ப்பமாகும். 1999ஆம் ஆண்டு கார்கில் சிகரத்தில் பாரதமாதாவை பாதுகாக்கும் போது மிக உயர்ந்த தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் நான் தலைவணங்குவதுடன் அவர்களின் புனித நினைவுகளுக்கு தலைவணங்குகிறேன். 


அவர்களது தியாகம் மற்றும் வீரத்தால் அனைத்து நாட்டு மக்களும் ஈர்க்கப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். ஜெய்ஹிந்த் இந்தியாவுக்கு வெற்றி எனக் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.


புதுச்சேரி முதல்வர் அஞ்சலி:




புதுச்சேரியில், முதல்வர் ரங்கசாமி தலைமையில் கடற்கரையில் மலர் வளையம் வைத்து உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.