Kerala tour diaries.. அழகான மலம்புழா அணை .. பிரமிக்க வைக்கும் பாலக்காடு கோட்டை!

Su.tha Arivalagan
Oct 07, 2024,03:44 PM IST

சென்னை:    காரைக்குடி லட்சுமணனின் கேரளா டூர் டைரியின் 2வது பாகத்தில் மலம்புழா அணையின் எழிலும், பாலக்காடு கோட்டையின் அழகும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படிக்கலாம் வாங்க.


இரண்டாம் நாள் காலையில் பாலக்காட்டில் உள்ள  மலம்புழா அணையின் உள்ளே நாங்கள் தங்கியிருந்த ரூமில் இருந்து  மறுநாள் ( இரண்டாம் நாள் ) காலையில் வாக்கிங் நடந்து வந்து அருகே உள்ள இடங்கள் அனைத்தையும் பார்வையிட்டோம்.  மீன் அக்வாரியம் , பாம்பு பண்ணை ,ரோப்கார் இருக்கக்கூடிய பகுதிகளையும், மலம்புழா அணை உள்ள இடங்களையும் வெளியில் இருந்தவாறு  சென்று பார்த்தோம். நல்ல வண்ண,வண்ண விளக்குகளுடன்  , நல்ல கூட்டத்திற்கு நடுவே நாம் மாலையில் தான் இந்த அணையை  பார்க்க வேண்டும்.


மலம்புழா அணை:




நாங்கள் காலையில் சென்றதால் வெயில் அதிகமாக இருந்தது. மிகப் பெரிய ஏரியாக இருந்தது பார்க்க பார்க்க ஆர்வமாய் இருந்தது . அணையின்  நடுவே நடக்கும் பாதையாக இரண்டு தொங்கு பாலம் அமைத்துள்ளார்கள். இரண்டுமே மிகவும் அருமையாக இருக்கின்றது. நமக்கு ஒரு திரிலிங் அனுபவமாகும் இருக்கின்றது. யாக்சி சிலையும் அமைத்துள்ளார்கள். அதுவும் மிகவும் அருமையான, தத்ரூபமான சிலையாக அமைக்கப்பட்டுள்ளது.


மலம்புழா அணையின் உள்ளே பல்வேறு இடங்களில் புல்வெளிகளில், பல விலங்குகளின் உருவங்களை மிக அழகாக செதுக்கி வைத்துள்ளார்கள். மலம்புழா அணையும் மிகப் பெரியதாக அமைந்துள்ளது. பல நூறு படிகளை கடந்து அணையின் மேல் பகுதியை  நாம் காண வேண்டி உள்ளது. அங்கே சென்று நாம் பார்க்கும் பொழுது நமக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. மிகப்பெரிய அணைக்கட்டு.கடல் போன்ற தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.


கண்ணன்  சிலையை வைத்து பல இடங்களில் தண்ணீர் ஊற்றுக்களை ஏற்படுத்தியுள்ளார்கள். ரோப் கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மலம்புழா அணையில்  ஒரு நாள் முழுவதும் நம்மால் பயணத்திட்டம் அமைத்து அனுபவிக்க  முடியும். காலையில்  சாப்பாடு கட்டிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டால் நன்றாக சுற்றி பார்த்துவிட்டு, மதியம் தூங்கி விட்டு, மறுபடியும் மாலை பச்சை பசேலென்ற பல பகுதிகளை பார்த்து விட்டு வெளியே வரலாம். பாம்பு பண்ணையும் அமைத்து உள்ளார்கள்.


பாம்பு பண்ணை மியூசியம்:




பாம்பு பண்ணை அருங்காட்சியகம் திங்கள் கிழமையாக இருந்ததால் விடுமுறை விடுமுறை நாளாக இருந்ததால் எங்களால் பார்க்க இயலவில்லை. மீன் அருங்காட்சியகம் நல்ல முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் செயல்பாடு இல்லாமல் உள்ளது தான் வருத்தத்திற்குரிய விஷயம். இவை அனைத்திற்குமே டிக்கெட் வாங்குகிறார்கள்.  மலம்புழா அணை  உள்ளே செல்வதற்கு ஒரு நபருக்கு 40 ரூபாய். மீன் அருங்காட்சியகம் உள்ளே செல்வதற்கு ஒரு நபருக்கு 30 ரூபாய். அதே போன்று பார்க்கிங்குக்கும்  தனியாக பணம் வசூல் செய்கிறார்கள்.


மலம்புழா அணையில்  தொங்கு பாலத்தின் வழியாக செல்லும் பொழுது நம்மை அறியாமல் நமக்கே ஒரு பயம் ஏற்படுகிறது. ரோப்கார்  வசதியும் அமைத்து உள்ளார்கள். அதுவும் மிகவும் நல்ல முறையில் செயல்பாடு செய்து வருகின்றது. மலப்புழா அணையில் நினைவு தூண் அமைத்துள்ளனர்.சென்னை மாகாணத்தில் கேரளாவின் பாலக்காடு இருந்தபோது அமைச்சர் பக்தவச்சலம் ஏற்படுத்திய அணைதான் மலம்புழா அணை  ஆகும் . எனவே அதனை நினைவு கூறும் வகையில் மிகப்பெரிய அளவில் நினைவு தூண் அமைத்துள்ளனர்.


யாஷிகா சிலை:




மாலையில் நாம் மலம்புழா டேம் உள்ளே சென்றால் லைட் வெளிச்சத்துடன் மிக அழகாக நாம் அனைத்தையும் பார்க்க முடியும். ஆனால் மாலையில் நாம் செல்லாமல் காலையில் சென்றதால் வெயிலின் கொடூரம் அதிகமாக இருந்தது. ஆனாலும் சென்று விட்டோம் என்கிற ரீதியில் அனைத்து இடங்களையும் விடாமல் பார்த்து விட்டு வந்தோம். யாஷிகா சிலை கலை நயத்துடன் சிறப்பான  முறையில் வடிவைக்கமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய உருவம் வடிவமைக்க பெரும் முயற்சி எடுத்துள்ளனர்.


மலம்புழா அணையில் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் அதிகமாக  உள்ளது. ஆனால் நாங்கள் வெயிலில் சென்றதால் எங்களால் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அங்கே இருக்க இயலவில்லை. மீண்டும் அங்கிருந்து நாங்கள் மீன் அருங்காட்சியகத்தை பார்வையிட்டுவிட்டு, தெற்கே மலம்புழா  பகுதிக்குச் சென்றோம். தெற்கே மலம்புழா பகுதி என்பது அணையின்  பின்பகுதி ஆகும். மலம்புழா டேம் இல் இருந்து 7 கிலோமீட்டர் பயணம் செய்தால் மிக அருமையான தண்ணீரின் அருகே நாம் பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது.


தண்ணீரின் மிக அருகில் கடல் போன்ற அமைப்புள்ளது. தண்ணீரின் அருகில் நாம் செல்லும் பொழுது நம்மை அறியாமலேயே பயமும் ஒரு உற்சாகம் ஏற்படுகின்றது. மீண்டும் அதே வழியில் நாம் வரலாம். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இந்த பயணத் திட்டத்தை நாம் ஒதுக்கி கொள்ளலாம் என்பதே எனது பயண அனுபவம். தெற்கே மலப்புழா அணையின் நிறைவில் எங்களுக்கு கப்ப  கிழங்கும், மீனும் ஒரு கடையில் கொடுத்தனர்.ஆனால் நாங்களோ பயணத்தை மனதில் வைத்துக்கொண்டு , பலா பச்சியும் , உள்ளி வடையும் சாப்பிட்டோம்.


பாலக்காடு போர்ட்:




தெற்கே மலம்புழா அணையில் இருந்து , நாங்கள் மீண்டும் பாலக்காடு போர்ட் -  கோட்டை நோக்கி சென்றோம். கோட்டை  மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே வருத்தமான விஷயம் என்னவென்றால், அங்கேயும் கோட்டையின் உள்ளேயும் பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி உள்ளார்கள். இதை அரசு நிர்வாகம் கண்டு கொள்கிறதா  என்பதை சொல்லத் தெரியவில்லை. ஒரு நபருக்கு 25 ரூபாய் கோட்டையின் உள்ளே செல்வதற்கு டிக்கெட் வசூல் செய்கிறார்கள். கேரளாவில்  அனைத்து இடங்களில்   குறைந்தது 30 முதல் 50 ரூபாய் வசூல் செய்கிறார்கள். கோட்டையின் உள்ளே நீண்ட அகழி ஏற்படுத்தி தண்ணீர் கொண்டு செல்கின்றனர்.பார்க்கவே மிக பிரும்மாண்டமாக உள்ளது.


காலையில் தோழர் பிரதீப்  அவர்களின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு சென்றோம். அவரது மனைவி ராதிகா , மகள், மகன் என அனைவரையும் அருள்மிகு அறிமுகப்படுத்தி தங்கள் குடும்பத்தினருடன் காலையிலேயே அவரது வீட்டில் உணவருந்த ஏற்பாடு செய்திருந்தார்கள். எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தோழர் பிரதீப் அவர்களை நாங்கள் வால்பாறையில் ஆசிரியராக பணியாற்றும் சுனில் அவர்களின் மூலமாகவே தொலைபேசி மூலம் அறிமுகமானார்.




கடந்த ஒரு ஆண்டாக அவருடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வருகிறோம் .. இந்த ஆண்டு பயணத் திட்டத்தை வகுக்கும்போது அவரிடம் பல்வேறு தகவல்கள், பல்வேறு முறையில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டேன். தோழர் பிரதீப் அவர்கள்  எனக்கு நல்ல முறையில் பல்வேறு உதவிகளை செய்தார்கள். பிரதீப் அவர்களின் மனைவியும், குழந்தைகளும் எங்களுடன் நல்ல முறையில் பழகி எங்களை காலை 10 மணிக்கெல்லாம் வழியனுப்பி வைத்தார்கள்.


அதன்பிறகுதான் நாங்கள் மலப்புழா அணை , மீன் அருங்காட்சியகம் கோட்டை ஆகியவற்றை பார்வையிட்டு மீண்டும் நாங்கள் மதியம் இடம் உணவகத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்து நேராக கோழிக்கோடு நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். பாலக்காட்டில் இன்னும் அதிகமான இடங்கள் இருப்பதாக சொன்னார்கள்.அவற்றை அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து அங்கிருந்து நாங்கள் கிளம்பினோம்.


Kerala Tour: குவார்ட்டர்லி லீவுக்குப் போன கேரளா டூர்.. காரைக்குடி லெட்சுமணனின் கலகல அனுபவம்!


அடுத்து.. கோழிக்கோடு பயணம் தொடரும் 


கட்டுரை - படங்கள்:

லெட்சுமணன், காரைக்குடி



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்