காரைக்காலில்.. ஜூன் 21ல் உலகப் பிரசித்தி பெற்ற.. மாங்கனி திருவிழா.. கோலாகல ஏற்பாடுகள்!

Manjula Devi
Jun 18, 2024,05:06 PM IST

காரைக்கால்: உலகப் பிரசித்தி பெற்ற காரைக்கால் மாங்கனி திருவிழா வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ளூர் பொது விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.


காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.இந்த வருடம் கைலாசநாதர் கோவில் திருவிழா ஜூன் 19 அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி ஜூன் 22ஆம் தேதி காரைக்கால் அம்மையாருக்கு இறைவன் காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.




குறிப்பாக உலகப் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையாரை நினைவு கூறும் மாங்கனித் திருவிழா வரும் ஜூன் 21ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.இந்த மாங்கனி திருவிழாவின் போது சிவபெருமான் பவளக்கால் சப்பரத்தில் பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாங்கனிகளுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.அப்போது சுவாமி திருத்தேர் வீதி உலா வரும் போது, பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். 


பக்தர்கள் வாரி இறைக்கும் மாம்பழங்களை மனதார ஈசன் ஏற்றுக் கொள்வார் என பக்தர்கள் கருதுகின்றனர். 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்வில் நிகழ்ந்த மாங்கனி தொடர்பான நினைவுகளை, நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இந்த மாங்கனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது என்பது நினைவிருக்கலாம்.


மாங்கனித் திருவிழா எப்படி வந்தது..?




63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்காலில் வாழ்ந்த புனிதவதி ஒரு தீவிர சிவ பக்தை. ஒரு நாள் ஈசன் இவரின் பக்தியை சோதிக்க எண்ணி சிவனடியார் வேடத்தில் உணவு வேண்டி புனிதவதியின் வீட்டிற்கு வந்தார். அப்போது புனிதவதியோ தன் கணவன் வாங்கி வைத்திருந்த இரண்டு மாங்கனிகளில் ஒன்றை சிவபெருமானுக்கு கொடுத்தார்.


சில மணி நேரம் கழித்து புனிதவதியின் கணவன் பரமதத்தன் வீடு திரும்பினார். அப்போது தான் கொடுத்த மாங்கனிகளை கொண்டுவா என மனைவியிடம் கேட்டு வாங்கி உண்டார். மாங்கனிகள் மிகவும் இனிமையாக இருக்க,மீதமுள்ள மாங்கனியையும் கொண்டு வா என கூறினார். உடனே புனிதவதி ஈசா இது என்ன சோதனை.. நான் என்ன செய்தேன்.. என ஈசனை எண்ணி மனதார வேண்டினார். உடனே புனிதவதியின் கையில் மாம்பழம் தோன்றியது. அந்த மாம்பழத்தை எடுத்து கொண்டு கணவனிடம் கொடுத்தார். 


கணவனோ அதை வாங்கி உண்டுவிட்டு, முதலில் சாப்பிட்ட மாம்பழத்தை விட இரண்டாவதாக சாப்பிட்ட மாம்பழம் மிகவும் இனிமையாக இருக்கிறது எப்படி என கேட்டார். உடனே புனிதவதி சிவனின் திருவிளையாடலை எடுத்துக் கூற கணவனோ நம்ப மறுத்தார். இதனை அடுத்து  இது உண்மை என்றால் இன்னொரு மாம்பழம் கொண்டு வா என கேட்டார் பரமதத்தன்.


உடனே மீண்டும் புனிதவதி மனதார ஈசனை மனம் உருக வேண்டினார். ஈசனோ  புனிதவதியின் கையில் மாம்பழத்தை கொடுத்து அருள் புரிந்தார். இதை பார்த்த கணவர் புனிதவதியின் பக்தியை கண்டு வியப்படைந்து அவரை விட்டு விலகினார். கணவனே தன்னை விட்டு விலகிய பிறகு நமக்கு எதற்கு இந்த உயிர் என இறைவனை எண்ணி வேண்டி உயிர்த் துறந்தார். இதன் பின்னர் புனிதவதி கையிலைக்குச் சென்று சிவபெருமானை சரணடைந்தார் என்பது புராண வரலாறு.