கப்பலூர் சுங்கச்சாவடி.. முடிவு தெரியும் வரை விட மாட்டோம்.. அதிரடியாக களம் குதித்த மக்கள்.. பரபரப்பு!

Su.tha Arivalagan
Jul 10, 2024,04:34 PM IST
மதுரை: மதுரை அருகே கப்பலூரில் உள்ள சுங்கச் சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் விதித்துள்ளதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மக்களுடன் அதிமுக உள்ளிட்ட கட்சியினரும் கலந்து கொண்டுள்ளதால் போராட்டம் பரபரப்பாகியுள்ளது. முடிவு தெரியும் வரை போராட்டத்தை விட மாட்டோம் என்று தொடர் போராட்டம் அங்கு நடந்து வருகிறது.

மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. 2012ம் ஆண்டு முதல் இது செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடியில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஏற்கனவே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் உள்ளூர் வாகனங்கள் இதுவரை பாஸ் எடுத்துக் கொண்டு இலவசமாக சென்று வந்தன. ஆனால் அதிலும் கூட அவ்வப்போது ஏதாவது பிரச்சினை இருந்தே வருகிறது. தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் சர்ச்சையை சந்திக்கும் சுங்கச் சாவடியாக இது இருந்து வருகிறது.



இதன் காரணமாக இந்த சுங்கச்சாவடியை முழுமையாக அகற்ற வேண்டும் என்று கோரி அடிக்கடி போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், தற்போது உள்ளூர்க்காரர்களும் 50 சதவீத கட்டணம் கட்ட வேண்டும் என்று சுங்கச்சாவடி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் உள்ளூர் மக்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர். இதை எதிர்த்து முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.பி. உதயக்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் இன்று காலை போராட்டத்தில் குதித்தனர்.

சுங்கச் சாவடியின் அனைத்துக் கவுன்டர்களையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் உட்கார்ந்தனர் மக்கள். இதனால் சுங்கச் சாவடி ஸ்தம்பித்துப் போனது. போலீஸாரும், தேசிய நெடுஞ்சாலை ஆணையக அதிகாரிகளும் போராட்டம் நடத்தியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட போராட்டக்காரர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்து கவுண்டர்களை முற்றுகையிட்டுள்ளனர். எங்களுக்கு முடிவு தெரியாதவரை போராட்டத்தை விடப் போவதில்லை என்று கூறி தொடர் முற்றுகைப் போராட்டமாக இதை அறிவித்துள்ளனர். கடந்த 7 மணி நேரமாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு சாப்பாடும் கொண்டு வரப்பட்டது. தக்காளி சாதம், தயிர்ச்சாதம், ஊறுகாய் போன்றவை தரப்பட்டன. மேலும் போராட்டம் தொடரும் வாய்ப்புள்ளதால் இரவு சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அங்கேயே சமைக்கவும் ஏற்பாடுகள் செயது வருகின்றனர். இதனால் கப்பலூர் சுங்கச்சாவடியில் பரபரப்பு நிலவுகிறது.