கன்னியாகுமரி ஸ்பெஷல்.. தித்திக்கும் தேன் பலா.. அயனி சக்க.. மிஸ் பண்ணாம சாப்டுங்க மக்ளே!

Su.tha Arivalagan
May 02, 2024,06:39 PM IST

- சந்தனகுமாரி


கன்னியாகுமரி பக்கம் போனீங்கன்னு வைங்க.. அந்த ஊரை விட்டு வரவே மனசு வராது.. அவ்வளவு அருமையான ஊருங்க அது.. திரும்பிய பக்கமெல்லாம் தித்திப்பான விஷயங்களைப் பார்க்கலாம். அப்படிப்பட்ட அழகான அம்சங்களில் ஒன்றுதான் இந்த "அயனி சக்க"!


அயனி சக்க கேள்விப்பட்டு இருக்கீங்களா?. சம்மர் தொடங்கியாச்சு. சம்மர் வந்தாலே மாம்பழம், அண்ணாச்சி பழம் இப்படித்தான் பலரும் படையெடுப்பார்கள்.. ஆனால் கன்னியாகுமரி பக்கம் இந்த அயனி சக்கதான்.. சக்கை போடு போடும்.. இந்த மரம் கேரளத்திலும், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் தான் அதிகமாக காணப்படுகிறது. சக்க என்பதை வேற ஒன்னும் இல்லைங்க.. பலாவைத்தான் இந்தப் பகுதியில் இப்படி சொல்கிறார்கள். அயனி சக்க என்பது ஒருவகை பலாப்பழம். 




பொதுவாவே குட்டியா இருக்கிற பழங்கள் எல்லாமே ஸ்பெஷல் டேஸ்ட்டுடன் இருக்கும். அது போல தான் இந்த அயனி சக்கையும். உருவத்தில்  சிறிய பலாப்பழத்தை போன்று இருக்கும். ஆனால் செம தித்திப்பா இருக்குங்க.. சாப்பிட்டா சாப்பிட்டுட்டே இருக்கணும் போல இருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஸ்பெஷலாக சொல்லப்படுற இந்த அயனி சக்க, கேரளாவில் ஆஞ்சிலி பலா என்று சொல்லப்படுகிறது. இந்த அயனி சக்க காயாக இருக்கும் போது பச்சை நிறத்திலும், பழுத்ததும் அதன் மேல் இருக்கும் முள்முள்ளான தோல் மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். வழக்கமான பலாப் பழங்களில் தோலை  வெட்டி விட்டுத்தான் சாப்பிட வேண்டும். ஆனால் அயனி சக்கையில் அப்படி இல்லை. பழுத்ததுமே அந்தத் தோலும் மென்மையாக மாறி விடும்.. எனவே நம்முடைய கைகளால் அந்த தோலை சாதாரணமாக பிரித்து எடுக்கலாம். 


பிரித்து எடுத்துப் பார்த்தால் உள்ள ஆரஞ்சு நிறத்தில் சக்க சுளைகள் கொத்தாக இருக்கும். சொல்றப்பவே நாக்கில் எச்சில் ஊறுது பாருங்க. பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும். பார்ப்பதற்கு மட்டுமா .. சாப்பிட்டு பார்த்தால் ருசி அப்படி இருக்கும். லேசான புளிப்பும், இனிப்பு சுவையும் சேர்ந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். பழத்தை மட்டும் சாப்பிட மாட்டாங்க.. கூடவே அதில் இருக்கும் கருப்பு நிற விதையையும் எடுத்து வறுத்து சாப்பிட்டால் பயங்கர ருசியாக இருக்கும். இந்த அயனி சக்க வெயில் காலங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமாக கிடைக்கும்.


எங்களுடைய பள்ளி பருவங்களில் கோடை விடுமுறையில் சொந்தக்காரங்க வீட்டிற்கு செல்லும் போது அங்கு அனைத்து வீடுகளிலும் அயனி சக்கை மரம் இருக்கும். அது மட்டுமல்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்தில், அயனிச் சக்கை கூறு வைத்து சந்தையில் விற்கப்படும். பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும்  வாங்கணும் என்ற ஆசையே நமக்கு தூண்டும். ஒவ்வொரு முறை விடுமுறையிலும் சொந்தக்காரங்க வீட்டிற்கு செல்லும் போது அயனி சக்கையைப் பார்த்துட்டா போதும்.. திகட்டத் திகட்ட வாங்கி சாப்பிடுவது வழக்கம். அதிலும் குட்டீஸ்களிடையே சண்டையே நடக்கும்.  சண்டை போட்டு பங்கு வைத்து சாப்பிடுவோம். 




இயற்கை நமக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. பூலோகத்தை சொர்க்கமாகத்தான் படைத்தது இயற்கை.. அந்த இயற்கை கொடுத்த அற்புதங்களில் ஒன்றுதான் இது போன்ற பழங்கள். அதிலும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் காண முடியாத அயனி சக்கை, கன்னியாகுமரியில் மட்டும் வளர்வது அந்த மாவட்டத்துக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்தான். அப்படிப்பட்ட இனிமையான சுவையான பழத்தை இந்த சீசனில் தவறாமல் சுவைத்து அனுபவியுங்கள்.  இதில் சுவை மட்டும் இல்லைங்க, விட்டமின் சத்தும் அதிகம் இருப்பதால் அனைவரும் இந்த அயனி பழத்தை விரும்பி சாப்பிடுவர். மேலும் இந்த பழம் உடல் சூட்டையும் தணிக்க வல்லது.


அயனி மரம் குமரி  மாவட்டத்தில் பெரும்பாலான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. மாத்தூர் தொட்டி பாலம் செல்லும் வழி எல்லாம் ரப்பர் மரங்களுக்கு இடையில் அயனி சக்க ஏகப்பட்டது வளர்ந்து நிற்கும். அயனி மரம் நேராகவும், உயரமாகவும் வளரக்கூடியது. அனைத்து வகையான பர்னிச்சர் செய்வதற்கும் இந்த அயனி மரம் உகந்ததாக இருக்கிறது. தேக்கு மரத்திற்கு இணையாக அயனி மரத்தையும் சொல்கிறார்கள். கேரளாவில் புகழ்பெற்ற பாம்பு படகுகள் இந்த அயனி மரத்தில் தான் செய்யப்படுகின்றது. அது மட்டுமல்ல கேரளாவில் உள்ள மர வீடுகள் அனைத்துமே இந்த அயனி மரத்திலிருந்து தான் செய்யப்படுகிறது. பிறகென்ன மக்களே, நீங்களும் கன்னியாகுமரி வந்தாச்சா மிஸ் பண்ணிடாம அயனி சக்க வாங்கி சாப்பிடுங்க. இந்த சம்மர ஜாலியா என்ஜாய் பண்ணுங்க.