"அமுல்" வருகையால்.. "நந்தினி"க்கு ஆபத்தா.. கொந்தளிக்கும் கர்நாடகா!

Su.tha Arivalagan
Apr 09, 2023,10:38 AM IST
பெங்களூரு: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அமுல் பால் விற்பனையை கர்நாடகத்தில் தொடங்க மிகப் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமுல் பால் விற்பனையை கர்நாடகத்தில் தொடங்குவதே, கர்நாடக மக்களின் அபிமானத்தைப் பெற்ற நந்தினி  பாலை ஓரம் கட்டத்தான் என்று கர்நாடக மக்கல் கொந்தளித்துள்ளனர். நந்தினிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பிரச்சாரங்களும் அனல் பறக்கின்றன.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அமுல் நிறுவனம் நாடு முழுவதும் தனது மார்க்கெட்டிங்கை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. "ஒரே நாடு ஒரே பால்"  என்ற குறிக்கோளுடன் அமுல் செயல்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மேலும் கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சம்மேளனத்தை (இதுதான் பாலை உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கி நந்தினி என்ற பெயரில் மக்களுக்கு விநியோகிக்கிறது), அமுல் நிறுவனத்துடன் இணைக்கவும் கர்நாடக மாநில பாஜக அரசு சதி செய்வதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் மக்களின் மனம் கவர்ந்த நந்தினி பாலுக்குப் போட்டியாக அமுல் களம் இறங்கியுள்ளது. அமுல் பால் விற்பனையை அந்த நிறுவனம் கர்நாடகத்தில் தொடங்கியுள்ளது. இது பாஜகவின் சதியே என்று அங்கு கொந்தளிப்பு கிளம்பியுள்ளது. கர்நாடக பால் உற்பத்தியாளர்களின் வாழ்க்கையில் மண்ணைப் போடும் செயல் இது என்று கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.




இதையடுத்து  யாரும் அமுல் தயாரிப்புகளை வாங்க வேண்டாம். பால் உள்பட மொத்த தயாரிப்புகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளன. சமூக வலைதளங்களிலும் நந்தினிக்கு ஆதரவாக மக்கள் களம் குதித்துள்ளனர். இந்த நிலையில் இதற்கு உச்சமாக பெங்களூர் மாநகர ஹோட்டல்கள் சங்கமும் நந்தினிக்கு ஆதரவாக அறிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அந்த ஹோட்டல் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது விவசாயிகள் மூலம் கிடைக்கும் நந்தினி பால் நமது கர்நாடகத்தின் பெருமையாகும். இதை ஆதரிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.  நமது நகரின் சுவையான காபி நமது அடையாளமாக உள்ளது. இதை பெருமையுடன் நாம் நந்தினி பாலுடன் இணைத்து கொண்டாட வேண்டும். பிற மாநிலங்களிலிருந்து பால் இங்கு விற்பனை செய்யப்படுவதாக கேள்விப்படுகிறோம்.  நாம் அனைவரும் நந்தினி பாலின் பெருமைக்குரிய காவலர்கள் என்பதை சொல்லிக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கூறுகையில், அமுல் தயாரிப்புகளை கன்னட மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும். கர்நாடக பால் சம்மேளனத்தை குஜராத் அமுல் நிறுவனத்திடம் விற்கப் போகிறார்கள்.இதை கர்நாடக மக்கள் ஒருங்கிணைத்து எதிர்க்க வேண்டும்.  அமுல் தயாரிப்புகளை முழுமையாக புறக்கணித்தால்தான் இது சாத்தியம் என்றார் அவர்.

சித்தராமையா மேலும் கூறுகையில், இந்தியைத் திணித்தார்கள், நிலங்களை அபகரித்தார்கள். இப்போது பால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழிக்கப் பார்க்கிறார்கள். பாஜக அரசின் இந்த சதியால் லட்சக்கணக்கான பால் விவசாயிகள் நாடு முழுவதும் பேரழிவை சந்திப்பார்கள்.

��ுதல்வர் பிஎஸ் பொம்மை உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு அமுல் நிறுவனம் கர்நாடகத்திற்குள் பின்வாசல் வழியாக நுழையாமல் தடுக்க வேண்டும். மாநிலத் தலைமை மிகவும் பலவீனமாக இருப்பதால்தான் கர்நாடக பால் சம்மேளனம் மிகவும் மோசமான நிலைக்குப் போய் விட்டது என்றார் சித்தராமையா.

இன்று நந்தினிக்கு "பால்".. நாளை ஆவின் பாலா.. !!