பான் இந்தியா படமாக உருவாகும்..  கங்குவா ஷூட்டிங்கின் போது விபத்து.. நூலிழையில் தப்பிய சூர்யா!

Su.tha Arivalagan
Nov 23, 2023,04:26 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பின் போது ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது சூர்யா நூலிழையில் உயிர் தப்பினார்.


சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படம் கங்குவா. இப்படத்தில் நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு ,ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல முன்னணி கதாபாத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படம் 32 மொழிகளில் மிகப் பிரமாண்டமான படமாக உருவாகி வருகிறது. படத்தை 3டி முறையில் வடிவமைப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


இந்நிலையில் சென்னையை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் சண்டைக் காட்சி தொடர்பான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இங்கு இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஷூட்டிங்கின்போது, பத்தடி உயரத்தில் சூர்யா ஒரு பக்கம் கயிற்றில் தொங்கிக் கொண்டு நடித்து வந்தார் . மறுபக்கம் மற்றொரு கயிற்றில் கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. திடீரென அந்த கேமரா பொருத்தப்பட்டிருந்த கயிறு அறுந்து வேகத்துடன் சூர்யா முகத்திற்கு நேராக மோதுவது போல வந்தது. 




இதனை அறிந்த சூர்யா உடனே முகத்தை திருப்பிக் கொண்டு விட்டார். இதனால் முகத்தில் கேமரா மோதுவது தவிர்க்கப்பட்டது. அதேசமயம் சூர்யாவின் தோள்பட்டையில் மோதியது. அதிக எடை உடைய கேமரா சூர்யாவின் தோள்பட்டையில் மோதியதால் அவர் கீழே விழுந்து விட்டார். இந்த நிகழ்வு நடந்த போது நள்ளிரவு ஒரு மணி. இதைப் பார்த்து படக்குழுவினர் அனைவரும் பதட்டத்துடன் அலறினர். 


உடனடியாக மருத்துவர்களை வரவழைத்து சூர்யாவை பரிசோதித்தனர். பெரிய அளவில் காயம் இல்லாத போதிலும், 2 வாரம் ஓய்வெடுக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். இன்று படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அறிந்த நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.


ஏற்கனவே கமலஹாசன் நடித்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின் போது கிரேன்  விழுந்து இரண்டு பேர் உயிரிழந்தார்கள். அதுவும் இதே தளத்தில்தான் நடைபெற்றது. தற்போது போது மீண்டும் கங்குவா பட பிடிப்பு போது  இன்னொரு விபத்து ஏற்பட்டுள்ளது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.