கந்த சஷ்டி விரதம் 2024 : கோவிலுக்குப் போகாமல்.. வீட்டிலேயே எளிமையாக விரதம் இருக்கும் முறை

Aadmika
Oct 23, 2024,04:46 PM IST

சென்னை : முருகனுக்கு கிழமை, திதி, நட்சத்திரம் என மூன்று வகையான விரதங்கள் இருக்கப்படுவது வழக்கம். முருகனின் அருளை பெறவும், முருகனிடம் வேண்டிய வரங்கள் கிடைக்கவும் இந்த மூன்று வகையான விரதங்களை பக்தர்களை இருப்பதுண்டு. கிழமையிலும் செவ்வாய்கிழமையும், திதிகளில் சஷ்டி திதியும், நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரமும் முருகப் பெருமானுக்கு ஏற்றதாகும். இந்த மூன்று தினங்களிலும் முருகனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் முருகனிடம் கேட்ட விஷயங்கள் மட்டுமல்ல கேட்காமல் மறந்து போன விஷயங்களையும் கூட நிறைவேற்றி வைப்பார்.


முருகனுக்குரிய விரதங்களில் மிக அதிகமானவர்களால் கடைபிடிக்கப்படும் விரதம் சஷ்டி விரதமாகும். பெரும்பாலும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் சஷ்டி விரதம் இருப்பது வழக்கம். " சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்று பழமொழியே உண்டு. சஷ்டி திதியில் முருகனை வேண்டி விரதம் இருந்தால், அகப்பையாகிய கருப்பையில் நிச்சயம் குழந்தை வரும் என்பது தான் இதன் பொருள். குழந்தை மட்டுமின்றி, திருமணம், வேலை, நோய், தீராத கஷ்டம், வாழ்க்கையில் முன்னேற்றம், வருமானம், கடன் பிரச்சனை, பகைவர்கள் பிரச்சனை என எந்த பிரச்சனை இருந்தாலும் அது தீர வேண்டும் என்கிறவர்கள் சஷ்டியில் விரதம் இருக்கலாம்.




மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு சஷ்டி திதிகள் வந்தாலும், ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியையே மகாசஷ்டி என்றும், கந்தசஷ்டி என்றும் போற்றுகின்றோம். கந்தசஷ்டி விரதத்தை ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமையில் துவங்கி, சப்தமி வரையிலான ஏழு நாட்கள் கடைபிடிக்க வேண்டும். முருகன் திருக்கல்யாணம் நிறைவடைந்த பிறகே, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பலரும் ஆறுபடை வீடு முருகன் கோவிலுக்கும் சென்று, தங்கி, அங்கு விரதம் கடைபிடிப்பது உண்டு.  ஆனால் இன்றைய கால சூழ்நிலையில் பலரும் அலுவலகம், வேலைக்கு செல்ல வேண்டி இருப்பதால் வெளியூர்களுக்கு சென்று தங்கி, விரதம் இருக்க முடியாது.


அப்படி செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் கந்தசஷ்டி விரதம் இருக்கலாம். இந்த ஆண்டு கந்தசஷ்டி விரதம் நவம்பர் 02ம் தேதி துவங்கி, நவம்பர் 08ம் தேதி வரை கடைபிடிக்க வேண்டும். நவம்பர் 02ம் தேதி பிரதமை திதி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள முருகன் படத்திற்கு சிவப்பு நிற மலர்கள் சாற்றி, விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். வீட்டிலேயே காப்புக் கொண்டோ அல்லது காப்பு கட்டாமலோ விரதம் இருக்கலாம். வாய்ப்பு இருப்பவர்கள் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று காப்பு கட்டிக் கொண்டு வீட்டில் விரதம் இருக்கலாம்.


சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் குளித்து விட்டு வீட்டில் விளக்கேற்றி, முருகனுக்கு காய்ச்சிய பாலில் தேன் கலந்து அல்லது வாழைப்பழம் நைவேத்தியமாக படைத்து விரதத்தை துவக்கலாம். குலதெய்வத்திற்கு காணிக்கை முடிந்து வைத்து விட்டு, விநாயகரை வணங்கி விட்டு, வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு விரதத்தை துவக்கலாம். வீட்டில் யாரும் இல்லை என்பவர்கள் முருகனையே குருவாக எண்ணி வணங்கி விட்டு, விரதத்தை துவக்கலாம். 


ஒரு வேளை மட்டும் சாப்பிட்டோ அல்லது ஒரு வேளை மட்டும் உணவை தவிர்த்தோ அல்லது மூன்று வேளையும் தண்ணீர் மட்டும் சாப்பிட்டோ அல்லது தினமும் ஒரே ஒரு இளநீர் எடுத்துக் கொண்டோ அல்லது சாதம் இல்லாமல் காய்கறிகள் மட்டும் சாப்பிட்டோ அல்லது பால், பழம் மட்டும் சாப்பிட்டோ அல்லது மிளகு மட்டும் சாப்பிட்டோ விரதம் இருக்கலாம். இவற்றில் தங்கள் உடல்நிலைக்கு ஏற்ற முறையை தேர்வு செய்து விரதம் இருக்கலாம். தினமும் காலையிலும், மாலையிலும் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், வேல் மாறல், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, கந்தர் கலிவெண்பா, ஷண்முக கவசம், வேல் மாறல் என முருகனுக்குரிய ஏதாவது ஒரு மந்திரத்தை படிக்கலாம். முடியாதவர்கள் ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கலாம். நவம்பர் 08ம் தேதி முருகன் திருக்கல்யாணத்தை பார்த்த பிறகு, அங்கு தரும் பிரசாதத்தை சாப்பிட்டு, விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்