அதுக்குள்ள கிளைமேக்ஸுக்கு வந்தா எப்படி.. சீன் பை சீனா வருவோம்.. கமல்ஹாசன் பன்ச்!
Feb 28, 2023,04:03 PM IST
திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்குமா.. பலருடைய எதிர்பார்ப்பு இது.. காரணம் இருக்கிறது. காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டபோது டெல்லிக்குப் போய் அவருடன் யாத்திரையில் கலந்து கொண்டார் கமல்ஹாசன். அதேபோல தமிழ்நாட்டில் திமுகவுடன் வேகமாகவும் நெருங்க ஆரம்பித்தார். உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கத்தை வலுப்படுத்திக் கொண்ட அவர் உச்சமாக, ஸ்டாலினையும் பாராட்டிப் பேசி வந்தார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல், அங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரமும் செய்தார். இவையெல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்த அரசியல் நோக்கர்கள், லோக்சபா தேர்தலில் நிச்சயம் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் இணைவார் என்று பேச ஆரம்பித்துள்ளனர்.
ஒருவேளை கமல்ஹாசன், திமுக கூட்டணியில் இணைந்தால் எந்தத் தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று அளவுக்கு பேச்சுக்கள் களை கட்ட ஆரம்பித்தன. கோவையில் போட்டியிடுவாரா அல்லது ராமநாதபுரத்தில் நிறுத்தப்படுவாரா அல்லது சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியா என்றெல்லாம் விவாதங்கள் ஓட ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில்தான் இன்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் கமல்ஹாசன். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் கூட்டணி குறித்துக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், நானும் மு.க.ஸ்டாலினும் நண்பர்கள். இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அவர் மாபெரும் தலைவரின் மகன். பல்வேறு சவால்களை படிப்படியாக சந்தித்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்.
இது அரசியல் பேசும் இடமல்ல, நேரமும் அல்ல. கூட்டணி குறித்து இப்போதே கூற முடியாது. சீன் பை சீனாகத்தான் நகர முடியும். நேரடியாக கிளைமேக்ஸுக்குப் போகக் கூடாது. சீன் பை சீனாக கதையை நகர்த்துவோம் என்றார் கமல்ஹாசன்.