டிரம்ப்பை முந்துகிறார் கமலா ஹாரிஸ்.. லேட்டஸ்ட் கருத்துக் கணிப்பில்.. மகிழ்ச்சியில் டெமாக்கிரட்ஸ்!

Su.tha Arivalagan
Jul 24, 2024,04:56 PM IST

வாஷிங்டன்:   அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து அதிபர் ஜோ பிடன் விலகி விட்ட நிலையில் புதிதாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை விட, ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகம் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.


டொனால்ட் டிரம்ப்புக்கு 42 சதவீத ஆதரவும், கமலா ஹாரிஸுக்கு 44 சதவீத ஆதரவும் காணப்படுகிறது. இது சிறிய அளவிலான லீட்தான் என்றாலும் கூட வரும் நாட்களில் கமலா ஹாரிஸ் அதிரடியாக செயல்படும்போது இந்த ஆதரவு வித்தியாசம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தக் கருத்துக் கணிப்பை ராய்ட்டர்ஸ் - இப்ஸாஸ் இணைந்து எடுத்துள்ளன. பிடன் தனது முடிவை அறிவித்த 2 நாட்களில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு இது. 




முந்தைய கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸும், டிரம்ப்பும் சம அளவில் தலா 44 சதவீத ஆதரவுடன் இருந்தனர். தற்போது டிரம்ப்பை முதல் முறையாக முந்தியுள்ளார் கமலா ஹாரிஸ் என்பது ஜனநாயகக் கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விரைவில் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார். தற்போது அவர் மிகப் பெரிய அளவில் வேட்பாளர் விவாதத்தை எதிர்நோக்கியுள்ளார். இந்த வேட்பாளர் விவாதத்தின்போதுதான் ஜோ பிடன் செல்வாக்கு வெகுவாக சரிந்தது. அதே இடத்தில் அதிரடி காட்டி டிரம்ப்பை காலி செய்ய திட்டமிட்டுள்ளார் கமலா ஹாரிஸ். அவரது பேச்சுத் திறன் அனைவருக்கும் தெரிந்ததுதான். மேலும் அழுத்தம் திருத்தமாகவும் பேசக் கூடியவர். இதனால் வரும் நாட்களில் விவாதங்களில் கமலா ஹாரிஸின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று ஜனநாயகக் கட்சி நம்பிக்கையுடன் உள்ளது.