குடிக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையங்கள்.. உடனடியாக ஏற்படுத்துங்கள்.. கமல்ஹாசன்

Meenakshi
Jun 20, 2024,04:13 PM IST

சென்னை: போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மையம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 39 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பல பேர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த சம்வம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 




இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது  இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,


கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடைய விழைகிறேன்.


தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்.


போதைக்கு எதிரான போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது என்று பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.