"எத்தனை புகழ்ந்தாலும்".. நாகேஷின் நினைவு தினத்தையொட்டி நெகிழ்ந்த கமல்ஹாசன்!

Baluchamy
Jan 31, 2023,02:53 PM IST
சென்னை: "என் கலை மரபணுவில் வாழும் குருவே" நடிகர் நாகேஷின் நினைவு தினத்தையொட்டி நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.



நாகேஷ் என்ற பெயரை கேட்டாலே முதலில் ஞாபகம் வருவது அவரது அசாத்தியமான நடிப்பும், காமெடியும் தான். சிரிக்காதவரை கூட தனது காமெடி ரியாக்ஷ்ன் மூலம் சிரிக்க வைத்து விடுவார். அதேபோல் கல் மனதை கூட தனது நடிப்பின் மூலம் கண்ணில் கண்ணீரை சொட்ட வைத்துவிடுவார்.

தனது ஆரம்ப காலத்தில் ரயில்வே துறையில் எழுத்தராக பணிபுரிந்த நாகேஷ், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் ரயில்வே வேலை வேண்டாம் என நிராகரித்துவிட்டு தனது கனவை நோக்கி பயணித்தார்.

அரசு வேலையை விட்ட கையோடு சினிமாவில் நடிக்க சென்னைக்கு வந்த நாகேஷுக்கு சென்னை சில படங்களை கற்றுத் தந்தது. பல இடங்களுக்கு வாய்ப்பு தேடி அலைந்த நாகேஷுக்கு ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதனை சிறப்பாக செய்து மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார். சிறு கதாபத்திரத்தில் நடித்தாலும் தன்னை தனியாக கட்டிக்கொண்ட நாகேஷுக்கு கைமேல் பலன் கிடைத்தது.

நடிப்பினால் பலரை இம்ப்ரெஸ் செய்த நாகேஷுக்கு, இயக்குநர் சிகரம் கே.எஸ். பாலச்சந்தர் படத்தில் நடிக்க பெரும் திருப்புமுனை வாய்ப்பு கிடைத்தது, அதுவும் சைடு கதாபாத்திரம் இல்லை, ஹீரோவே இவர்தான்.  விடுவாரா நாகேஷ்.. சரியாக பிடித்துக் கொண்டார்.

கே.எஸ். பாலச்சந்தர் இயக்கிய 'சர்வர் சுந்தரம்' படத்தில் ஹீரோவாக நடித்த நாகேஷ் தனது குணச்சித்திர நடிப்பிப்பினை வெளிப்படுத்தி திரையுலகினர் மற்றும் மக்களை திரும்பிப்பார்க்க வைத்தார். நாகேஷின் சினிமா வாழ்க்கையில் இப்படம் மிக பெரிய திருப்புமுனையைாக அமைந்தது.

சர்வர் சுந்தரம் செம ஹிட்டான நிலையில் திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் என தொடர்ந்து நாகேஷ் இல்லாத பாடம் ஒரு படமே இல்லை என சொல்லும் நிலை ஏற்பட்டது. படத்தில் ஹீரோ யார் என கேட்பது போய், படத்தில் நாகேஷ் இருக்கிறாரா? என கேட்கும் நிலையில் நாகேஷின் வளர்ச்சி இருந்தது. 

எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி உள்ளிட்டோருடன் இணைந்து ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதேபோல் ரஜினி, கமல்ஹாசன் போன்றோருடனும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கமல்ஹாசனுடன் இணைத்து நடித்த பல படங்கள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படு வருகிறது.

அவ்வைசண்முகி, அபூர்வ சகோதரர்கள், பஞ்சதந்திரம் போன்ற படங்களில் நாகேஷின் குணச்சித்திர நடிப்பு பலரையும் ஈர்த்தது. இன்றைய விஜய், சிம்பு வரை நடித்து கலக்கியவர் நாகேஷ். இப்படியாக சினிமா உலகில் மகா நடிகனாக வலம் வந்த நாகேஷ் 2009ம் ஆண்டு ஜனவரி 31 தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

நாகேஷ் நினைவ நாளையொட்டி, கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.  அதில், மகா கலைஞர் நாகேஷின் நினைவுநாள் இன்று. 50 ஆண்டுகாலம் நீடித்த கலைப்பயணத்தில் 1000 படங்களுக்கு மேல் நடித்து நம்மை மகிழ்வித்தார்.  எத்தனை புகழ்ந்தாலும் அவற்றை விஞ்சி நிற்கும் ஆகிருதி அவருடையது. என் கலை மரபணுவில் வாழும் குருவை வணங்குகிறேன் என கமல் கூறியுள்ளார்