கோவையில் கமல்ஹாசன் போட்டி?... நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை!

Su.tha Arivalagan
Sep 22, 2023,02:21 PM IST

கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.


மக்கள் நீதி மய்யம்  கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் தடபுடலான வரவேற்பு அளித்தனர். உற்சாகமாக காட்சி அளித்த கமல்ஹாசன் பின்னர் நட்சத்திர ஹோட்டலில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்பட்டது.


வருகிற லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் கோவை அல்லது ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது. 


கமல்ஹாசனுக்கு தேர்தல் களம் புதிதல்ல.. அதிலும் கோவையும் நல்ல பரிச்சயம் உண்டு. கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் அவர் போட்டியிட்டார். பாஜகவின் வானதி சீனிவாசனிடம் மயிரிழையில் வெற்றியை நழுவ விட்டார். சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளையும் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.


இந்த நிலையில் சமீப காலமாக திமுகவுடன் மிகவும் நெருக்கமாக செயல்பட்டு வருகிறார் கமல்ஹாசன். முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் நெருங்கிச் செயல்பட்டு வருகிறார். எனவே வருகிற லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்து செயல்படும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.


அப்படி நடக்குமானால் கோவை அல்லது ராமநாதபுரத்தில் கமல்ஹாசன் போட்டியிடலாம். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்தான் அவரது சொந்த ஊரான பரமக்குடி வருகிறது. கோவையில் கமல்ஹாசனுக்கு தொண்டர் பலம் ஜாஸ்தி. இந்த இரண்டில் ஒரு தொகுதியில் அவர் போட்டியிடக் கூடும். இப்போதைக்கு கோவை தொகுதியில் அவர் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். இதுகுறித்துத்தான் இன்று முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது.